×

சிறுமியை கர்ப்பமாக்கிய ஆசாமிக்கு 21 ஆண்டு சிறை வேலூர் போக்சோ நீதிமன்றத்தில் தீர்ப்பு கொரோனா ஊரடங்கின்போது மிரட்டி பலாத்காரம்

வேலூர், ஜூன் 28: கொரோனா ஊரடங்கின்போது சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்து கரப்பமாக்கிய ஆசாமிக்கு 21 ஆண்டு சிறை தண்டனை விதித்து வேலூர் போக்சோ நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மேல்புதுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள்(51), கூலித்தொழிலாளி. இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. இதனால் அருகிலுள்ள ஒரு பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனை பயன்படுத்தி, சிறுமியின் பெற்றோர் இல்லாத நேரங்களில் அங்கு சென்ற பெருமாள், சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். இதேபோல் அடிக்கடி மிரட்டி பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

நாளடைவில் சிறுமியிடம் தெரிந்த மாற்றத்தை அறிந்த அவரது பெற்றோர் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு நடந்த மருத்துவ பரிசோதனையில் சிறுமி கர்ப்பமானது தெரிய வந்தது. அப்போது சிறுமியிடம் விசாரித்தபோது, நடந்த சம்பவத்தை கூறி அழுதார். மேலும் கர்ப்பத்தை கலைக்க முடியாத நிலையில், அச்சிறுமி குழந்தை ஒன்றை பெற்றெடுத்தாள். தங்கள் மகளுக்கு நேர்ந்த இந்த கொடுமை குறித்து சிறுமியின் பெற்றோர் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இப்புகாரை பெற்று விசாரணை நடத்திய போலீசார் பெருமாளை கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த வேலூர் போக்சோ நீதிமன்ற நீதிபதி கலைபொன்னி, 13 வயது சிறுமியை பாலியல் ரீதியில் துன்புறுத்திய பெருமாளுக்கு 21 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ₹6 ஆயிரம் அபராதம் விதித்தும் நேற்று தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் சந்தியா ஆஜராகி வாதாடினார். தொடர்ந்து பெருமாளை போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். வழக்கு விசாரணையை விரைந்து முடித்து குற்றவாளிக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க இமைகள் திட்டத்தின் மூலம் முயற்சி எடுத்த ராணிப்பேட்டை எஸ்பி கிரன் ஸ்ருதிக்கு, வேலூர் சரக டிஐஜி முத்துசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.

The post சிறுமியை கர்ப்பமாக்கிய ஆசாமிக்கு 21 ஆண்டு சிறை வேலூர் போக்சோ நீதிமன்றத்தில் தீர்ப்பு கொரோனா ஊரடங்கின்போது மிரட்டி பலாத்காரம் appeared first on Dinakaran.

Tags : Vellore Pocso court ,Corona ,Vellore ,Asami ,Corona lockdown ,Dinakaran ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...