×

மேலநீலிதநல்லூர் கல்லூரியில் மாணவர்களுடன் கலந்துரையாடல் கலைஞரின் வரலாற்றை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் கனிமொழி எம்பி பேச்சு

சங்கரன்கோவில். ஜூன் 28: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தொகுதி மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றியம் பசும்பொன் முத்துராமலிங்கதேவர் கல்லூரியில் மாணவ, மாணவியர்களுடன் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ஹரிகெங்காராம், ஆங்கிலத்துறைத் தலைவர் ராமபாரதி, முன்னாள் எம்பி விஜிலா சத்யானந்த், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் யூஎஸ்டி சீனிவாசன் முன்னிலை வகித்தனர். இயற்பியல் துறைத்தலைவர் சிவக்குமார் வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி பங்கேற்று சிறப்புரையாற்றி மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடினார்.

அப்போது கனிமொழி எம்பி பேசியதாவது, கலைஞரால் ஆரம்பிக்கப்பட்ட இக்கல்லூரி சில பிரச்னைகள் இருந்த நிலையில் கல்லூரியை மீட்டெடுத்தவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். கலைஞர் ஆரம்பித்த இக்கல்லூரியை மீட்டெடுத்து அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். தேவரின் புகழ், நினைவை போற்றும் வகையில் இக்கல்லூரிக்கு முத்துராமலிங்க தேவர் கல்லூரி என்று பெயர் வைத்து ஆரம்பிக்கப்பட்டது. சமூக நீதிக்காக ஒடுக்கப்பட்டவர்கள் குரலாக ஒழித்த முத்துராமலிங்க தேவர் தன் வாழ்வில் அவர் முன்வைத்த கருத்து ஜாதி என்பது அறவே ஒழிக்கப்பட வேண்டும் என்பதாகும்.
ஒருவருடைய பெயர் அவர் வாழும் வாழ்க்கை, செயல், மக்களுக்கு செய்யும் தொண்டுகள் ஆகியவைகளை வைத்து தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர் தேவர்.

கலைஞரின் வாழ்க்கை மாணவ, மாணவிகளுக்கு ஒரு முன்னுதாரணமாக உள்ளது. திருவாரூர் மாவட்டம் திருக்குவளை என்ற கிராமத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் மிகச்சாதாரண குடும்பத்தில் பிறந்து, தமிழ்நாட்டின் முதல்வராக 5 முறையும், இந்தியா முழுவதும் அனைவரும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு தலைவராகவும் திகழ்ந்தவர் கலைஞர். தனது கருத்துக்களை கையெழுத்து ஏடுகள் மூலம் துவக்கி அனைவருக்கும் தெரியப்படுத்தியவர். நாடகங்கள் மூலமும் தனது கருத்துக்களை தெரிவித்தும், ஜாதியால், பொருளாதாரத்தால் பின்தங்கியவர்களை தன்னம்பிக்கை, உழைப்பு, பணி மூன்றும் இருந்தால் வெற்றி பெறலாம் என அறியச் செய்தவர் கலைஞர். எனவே மாணவ, மாணவிகள் கலைஞரின் வரலாற்றை படித்துப் பார்த்தாலே தங்களுக்குள் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் தாமாகவே வந்துவிடும்.

மாணவர்கள் உயர்கல்வியில் முன்னேற வேண்டுமென கல்வித்துறையில் பெரும் புரட்சி செய்தவர் கலைஞர். இந்தியாவிலேயே மருத்துவக் கல்லூரிகள், கலை கல்லூரிகள் அதிகமுள்ள மாநிலம் தமிழ்நாடு என்பதை உருவாக்கியவர் கலைஞர். அவரது வழியில் தற்போது திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கல்வித்துறையில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் என்றார். தொடர்ந்து மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடிய போது ஒரு மாணவி தங்களுக்கு பிடித்த பெண் ஆளுமை யார் என்று கேட்டார். பெண் ஆளுமை உள்ளவர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். பெண்களுக்கு அனைத்திலும் சம உரிமை கிடைக்க பாடுபட்ட தந்தை பெரியார் தான் பெண்களுக்கான ஆளுமையை உருவாக்கித் தந்தவர் என்றார். தொடர்ந்து மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

பின்னர், படிப்பில் சாதனை புரிந்தவர்களுக்கு சான்றிதழ், பதக்கங்கள், கேடயங்கள் வழங்கினார். தொடர்ந்து நடந்த மரக்கன்று நடும் நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு தலைக்கவசம் வழங்கியும், மாணவிகளுக்கு புத்தக பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேல்நீதிநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை ஏற்பாட்டில் கல்லூரி வளர்ச்சி நிதிக்காக ரூ.50,001 வழங்கப்பட்டது. இதில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் பங்கேற்றனர். மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரிய துரை நன்றி கூறினார்.

The post மேலநீலிதநல்லூர் கல்லூரியில் மாணவர்களுடன் கலந்துரையாடல் கலைஞரின் வரலாற்றை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் கனிமொழி எம்பி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Valeneelidanallur College ,Sankaranko ,South Kasi District ,Mallanilidanallur East Union Pazumbon Muthuramalingdewar College ,Melanelidanallur College ,
× RELATED சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் பறக்கும் படை சோதனை