×

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆறுமுகநேரி வாரச்சந்தையில் ₹1 கோடிக்கு ஆடுகள் விற்பனை

ஆறுமுகநேரி, ஜூன் 28: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆறுமுகநேரி வாரச்சந்தையில் ₹1 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது. தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டயபுரம் ஆட்டுச்சந்தைக்கு அடுத்து ஆறுமுகநேரியில் கூடும் வாரச்சந்தை பிரசித்திப் பெற்றது. ஆடுகள் விற்பதற்கும், அதனை வாங்குவதற்கும் வியாபாரிகள் நெல்லை, தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து ஆறுமுகநேரி சந்தைக்கு வருகின்றனர். மேலும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த உள்ளூர் வியாபாரிகளும் சந்தைக்கு வருவதால் விற்பனை களைகட்டி காணப்படும்.

இந்நிலையில் நாளை (29ம் தேதி) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு நேற்று ஆறுமுகநேரி சந்தையில் அதிகாலை முதலே ஆடுகள் வாங்குவதற்கும், விற்பதற்கும் வியாபாரிகள் குவியத் தொடங்கினர். சந்தையில் 10 கிலோ முதல் 12 கிலோ வரை எடையுள்ள வெள்ளாடு ₹15 ஆயிரம் முதல் ₹20 ஆயிரம் வரை விற்பனையானது. அதிகாலை தொடங்கிய இந்த ஆட்டுச்சந்தை மதியம் 1 மணி வரை நடந்தது. கொடி ஆடு, சீமை ஆடு, நாட்டு ஆடு, வேலி ஆடு, செம்மறி ஆடு என பல்வேறு ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன. மொத்தம் ₹1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆறுமுகநேரி வாரச்சந்தையில் ₹1 கோடிக்கு ஆடுகள் விற்பனை appeared first on Dinakaran.

Tags : Arumuganeri ,Bakrit festival ,weekly market ,Bakrit ,Ettayapuram ,Thoothukudi district ,Arumukaneri ,Dinakaran ,
× RELATED ஆத்தூர் அருகே தறிகெட்டு ஓடிய கார் மளிகை கடைக்குள் புகுந்தது