×

சிதம்பரம் கனகசபை மீது பக்தர்கள் தரிசிக்க பாஜ எதிர்ப்பு: அனுமதிக்கக்கோரி காங்கிரஸ் போராட்டம்

* போலீசுடன் தீட்சிதர்கள் தள்ளுமுள்ளு

சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில், கடந்த 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என பொது தீட்சிதர்கள் அறிவிப்பு பலகை வைத்தனர். பக்தர்கள் எதிர்ப்பு காரணமாக இந்து அறநிலைத்துறை செயல் அலுவலர் சரண்யா, மற்றும் போலீசார் அந்த அறிவிப்பு பலகையை அகற்ற சென்றனர். அப்போது செயல் அலுவலர் சரண்யாவுக்கும், தீட்சிதர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து நேற்று முன்தினம் அந்த அறிவிப்பு பலகையை போலீசார் அகற்றினர். தொடர்ந்து நேற்று காலை முதலே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பக்தர்கள் கனகசபை மேல் ஏற முயன்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் கனகசபை முன்பு ஏஎஸ்பி ரகுபதி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் பக்தர்கள் கனகசபை மீது ஏற அனுமதித்தனர். இதை தொடர்ந்து காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராதா தலைமையில் கனகசபை படியில் அமர்ந்து தீட்சிதர்களுக்கு எதிராக கோஷமிட்டனர். அப்போது தீட்சிதர்களுக்கு ஆதரவாக கடலூர் மேற்கு மாவட்ட பாஜ தலைவர் மருதை தலைமையில் நிர்வாகிகள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் ஓம் நமச்சிவாய, நமச்சிவாய என்று கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. இவர்கள் போராட்டம் செய்து கொண்டிருந்தபோது, பின்புறம் வழியாக 2 இந்து அறநிலைய துறை அதிகாரிகள், 4 பெண் காவலர்கள் என 6 பேர் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தனர். அப்போது தீட்சிதர்களுக்கும், அங்கிருந்த போலீஸ் அதிகாரிகளுக்கும் கடும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

The post சிதம்பரம் கனகசபை மீது பக்தர்கள் தரிசிக்க பாஜ எதிர்ப்பு: அனுமதிக்கக்கோரி காங்கிரஸ் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : chidambaram ,kanakasabha ,congress ,Dikshitras Tulumullu ,Chidambaram Natarajar ,Cuddalore district ,
× RELATED பாஜ தலைவர்கள் கண் மருத்துவரை பார்க்க வேண்டும்: ப.சிதம்பரம் விமர்சனம்