×

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் நாள் விழா தமிழ்நாட்டில் ரூ.1,723 கோடி முதலீடுகள்: 30,000 பேருக்கு வேலைவாய்ப்பு; முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்

சென்னை: பன்னாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நாள் விழாவில் சுமார் 30,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கிடும் வகையில் ரூ.1723.05 கோடி மதிப்பிலான முதலீடுகள் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உறுதிசெய்யப்பட்டது. நாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் ஆற்றிடும் பங்களிப்பினை அங்கீகரிக்கும் விதமாக, ஆண்டுதோறும் ஜூன் 27ம் தேதி பன்னாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பன்னாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நாளினை அரசு விழாவாகக் கொண்டாட உத்தரவிட்டார். அதன்படி, சென்னை வர்த்தக மையத்தில் பன்னாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நாள் விழா அரசு விழாவாக சிறப்பான முறையில் நடைபெற்றது.

மானியத்திற்கான ஆணைகள் வழங்குதல்: முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் பொருளாதார வளர்ச்சியில் சமூக நீதியை நிலைநாட்டிடும் விதமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள புதிய திட்டமான ‘அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின்’ கீழ் முதல் 100 பயனாளிகளுக்கு ரூ.57.55 கோடி திட்ட மதிப்பீட்டில் தொழில் தொடங்கும் வகையில் ரூ.18.94 கோடி மானியத்துக்கான ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி, தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் 35 சதவீதம் முதலீட்டு மானியம், 6 சதவீத வட்டி மானியம் வழங்கப்படுகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இத்தகைய மானிய சலுகையுடன் வேறு எந்த மாநிலத்திலும் செயல்படுத்தப்படவில்லை. திட்டம் அறிவிக்கப்பட்ட மூன்று மாத காலத்தில் 127 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர்களுக்கு ரூ.24.26 கோடி மானியத்துடன் ரூ.45 கோடி கடன் வழங்க ஒப்புதல் ஆணைகள் பெறப்பட்டுள்ளன.

மூன்று புதிய தொழிற்பேட்டைகள்: செங்கல்பட்டு மாவட்டம்- கொடூர், திருச்சி மணப்பாறை மற்றும் மதுரை மாவட்டம் – சக்கிமங்கலம் ஆகிய இடங்களில் 262.03 ஏக்கர் பரப்பளவில் ரூ. 153.22 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள 3 தொழிற்பேட்டைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்மூலம், 21,500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.

கடலூரில் முந்திரி பதப்படுத்தும் குறுந்தொழில் குழுமம்: கடலூர் மாவட்டம் காடம்புலியூரில் ரூ.2 கோடியே 16 லட்சம் திட்ட மதிப்பீட்டில், அதில் ரூ.1.81 கோடி தமிழ்நாடு அரசு மானியத்துடன் அமைக்கப்பட்டுள்ள முந்திரி பதப்படுத்தும் குறுந்தொழில் குழுமத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் ஊரகப்பகுதிகளில் நீடித்த நிலையான வேலைவாய்ப்பினை உறுதி செய்திடவும், பாலினம் மற்றும் சமூக சமநிலையை உறுதிபடுத்திடவும் இந்த குறுங்குழுமங்களை மேம்படுத்துவது முக்கியம். இக்குறு நிறுவனங்களின் மேம்பாட்டிற்காக “குறுந்தொழில் குழும மேம்பாட்டுத் திட்டம்” என்ற புதிய திட்டத்தை கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு, இதுவரை 28 குறுங்குழுமங்கள் ரூ.117.33 கோடி தமிழ்நாடு அரசு மானியத்துடன் ரூ.143.47 கோடி திட்டமதிப்பீட்டில் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இவ்விழாவில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு சந்தை வாய்ப்பினை உருவாக்கிடும் நோக்கோடு மெய்நிகர் கண்காட்சியகத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.

மாணவ அணிகளின் புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கு பரிசு: மாணவர்கள் புத்தாக்க சிந்தனையுடன் படிப்பு முடித்த பிறகு பலருக்கு வேலை கொடுப்பவராக மாற்றக்கூடிய பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத்திட்டம் தமிழ்நாடு அரசால் கடந்த ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் முதல் பதிப்பின் கீழ் வெற்றி பெற்ற 10 மாணவ அணிகளின், புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கு முதல்வர் தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.10 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார்.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளுதல்: சமச்சீர் வளர்ச்சியை முன்னெடுக்கும் விதமாக தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் அனைத்து தொழில் பிரிவுகளையும் உள்ளடக்கிய ரூ.1,510 கோடி மதிப்பில் 7,400 வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில், கடன் வசதியாக்கல் மற்றும் தொழில்நுட்ப கட்டமைப்பிற்கான ஃபேம் டிஎன் அமைப்பிற்கும், தொழில்முனைவோர்களுக்கும் இடையே 100 புதிய முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், சிட்பி மூலம் கடன் பெறும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசின் சலுகைகளை வழங்கிடவும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களுக்கு சிட்பி மூலம் நிதி ஆதாரங்கள் ஏற்படுத்திடவும் கடன் வசதியாக்கல் மற்றும் தொழில்நுட்ப கட்டமைப்பிற்கான ஃபேம் டிஎன் மற்றும் சிட்பி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வகையில் விருதுகள்: தொழில்துறையின் வளர்ச்சிக்கு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் மாநில அளவில் சிறந்த தொழில்முனைவோர் விருதினை ஹீட் எக்ஸ்சேஞ்சர்ஸ் மற்றும் வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் காஞ்சிபுரம்-பிரிசிசன்ஸ் எக்யுப்மெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கும், மாநில அளவில் சிறந்த மகளிர் தொழில்முனைவோர் விருதினை வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் காஞ்சிபுரம்-யுனிடெக் பிளாஸ்டோ காம்பொனன்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கும், மாநில அளவில் சிறந்த வேளாண்சார் தொழில் நிறுவனத்திற்கான விருதினை மாம்பழ கூழ் தயாரிக்கும் கிருஷ்ணகிரி – பவித்ரன் அசப்டிக் ப்ரூட் புராடக்ட் நிறுவனத்துக்கும், மாநில அளவில் சிறந்த தரம் மற்றும் ஏற்றுமதி நிறுவனத்திற்கான விருதினை விண்வெளி மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் சேலம் – ஏரோஸ்பேஸ் இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கும், மாநில அளவிலான சிறந்த சிறப்புப் பிரிவைச் சேர்ந்த சிறந்த நிறுவனத்திற்கான விருதினை இயந்திர தளவாடங்கள் தயாரிக்கும் கோயம்புத்தூர் – டிஎம் இன்ஜினியரிங் நிறுவனத்துக்கும் விருதினை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி, வாழ்த்தினார்.

மேலும், சிறந்த வங்கிக்கான முதலிடத்திற்கான விருதினை இந்தியன் வங்கிக்கும், 2ம் இடத்திற்கான விருதினை இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கும், 3ம் இடத்திற்கான விருதினை பேங்க் ஆஃப் பரோடா வங்கிக்கும் முதல்வர் வழங்கினார். முதல்வர் தலைமையில் நேற்று நடைபெற்ற இவ்விழாவில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் சார்பில் ரூ.1723.05 கோடி மதிப்பிலான முதலீடுகள் உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் சுமார் 30,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.

இவ்விழாவில், குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ,அன்பரசன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் இ.கருணாநிதி, எஸ்.எஸ். பாலாஜி, வரலட்சுமி மதுசூதனன், பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலர் காகர்லா உஷா, குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் அருண் ராய், டான்சி நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஸ்வர்ணா, தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் சிஜி தாமஸ் வைத்யன், சிட்கோ நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மதுமதி, தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் இயக்குநர் சந்திரகலா, தொழில் வணிகத் துறையின் கூடுதல் ஆணையர் கிரேஸ் பச்சாவ், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் சிவராஜா ராமநாதன், தமிழ்நாடு குறு சிறு தொழில் நிறுவனங்கள் சங்கத்தின் தலைவர் மாரியப்பன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் நாள் விழா தமிழ்நாட்டில் ரூ.1,723 கோடி முதலீடுகள்: 30,000 பேருக்கு வேலைவாய்ப்பு; முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல் appeared first on Dinakaran.

Tags : Minor, Small and Medium Enterprises Day Festival in ,Tamil Nadu ,Principal ,B.C. G.K. Stalin ,Chennai ,Small and Medium Enterprises ,Minor, Small and Medium Enterprises Day Festival ,M.D. G.K. Stalin ,
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...