×

உளவுத்துறை, சட்டம் ஒழுங்கு உள்பட 3 ஏ.டி.ஜி.பி.க்கள் அதிரடி மாற்றம்: உளவுப் பிரிவு ஐஜிக்கு கூடுதல் பொறுப்பு

சென்னை: உளவுத்துறை, சட்டம் ஒழுங்கு ஏடிஜிபிக்கள் நேற்று அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர். புதிய சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக அருண், ஆவடி கமிஷனராக சங்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். உளவுத்துறை ஏடிஜிபி பதவியை ஐஜியே கவனிப்பார் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக தலைமைச் செயலாளராக உள்ள இறையன்பு, சட்டம் ஒழுங்கு டிஜிபியாக உள்ள சைலேந்திரபாபு ஆகியோரின் பதவிக்காலம் வருகிற 30ம் தேதியுடன் முடிகிறது. இதனால் தமிழகத்தின் தலைமைப் பதவியாக உள்ள 2 பதவிகளுக்கும் அதிகாரிகளை நியமிப்பது குறித்து தமிழக அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. இதனால் ஓரிரு நாளில் இதற்கான அறிவிப்புகள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், தமிழக அரசு அதிரடியாக 3 ஏடிஜிபிக்களை மாற்றி நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு நேற்று இரவு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றப்பட்டு, தலைமையிட ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பதவியை நிர்வாகப் பிரிவு ஏடிஜிபி பாலநாகதேவி கூடுதலாக கவனித்து வந்தார். ஆவடி போலீஸ் கமிஷனராக உள்ள அருண், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த சங்கர், ஆவடி போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். உளவுத்துறை ஐஜியாக உள்ள செந்தில்வேலன், உளவுத்துறை ஏடிஜிபி பதவியை கூடுதலாக கவனிப்பார் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பது, போதைப் பொருளை ஒழிப்பது, பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது போன்ற பணிகளை தீவிரப்படுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உயர் அதிகாரிகளுடன் தீவிரமாக ஆலோசனை நடத்தி வந்தார். குறிப்பாக சட்டம் ஒழுங்கை தீவிரமாக பரமரிப்பது மற்றும் ரவுடிகளை ஒருக்குவதற்காக சட்டம் ஒழுங்கில் திறமை வாய்ந்த அதிகாரியை நியமிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வந்தார். இந்த ஆலோசனையைத் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி சங்கர் மாற்றப்பட்டு அருண் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேநேரத்தில் சங்கர் மீதும் பெரிய அளவில் குற்றச்சாட்டுகள் இல்லை என்பதால் அவர் ஆவடி போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். விரைவில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நியமிக்கப்பட உள்ளார். இந்தப் பதவியை நிரப்புவதற்காக டிஜிபி அந்தஸ்தில் உள்ள 12 அதிகாரிகளின் பட்டியலை தமிழக அரசு தயாரித்து ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு சமீபத்தில் அனுப்பி வைத்தது. அதைத் தொடர்ந்து, தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறைச் செயலாளர் அமுதா, டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோருடன் ஒன்றிய அரசின் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

இதன் தொடர்ச்சியாக, சஞ்சய் அரோரா, பி.கே.ரவி, சங்கர் ஜிவால் ஆகிய 3 பேர் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டது. அந்தப் பட்டியல் தற்போது தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து ஒருவரை தமிழக அரசு தேர்வு செய்ய வேண்டும். அதில் சென்னை போலீஸ் கமிஷனராக உள்ள சங்கர் ஜிவால், சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு அவர் நியமிக்கப்பட்டால், சென்னை போலீஸ் கமிஷனராக ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும். சென்னை போலீஸ் கமிஷனர் பதவிக்கு தற்போது டிஜிபி அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளே நியமிக்கப்படுகின்றனர். இதனால், டிஜிபி அந்தஸ்தில் உள்ள அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரு மாற்றங்களும் ஓரிரு நாளில் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசு போலீஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றம் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவிக்கு சஞ்சய் அரோரா, பி.கே.ரவி, சங்கர் ஜிவால் ஆகிய 3 பேர் கொண்ட பட்டியல் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
* சென்னை போலீஸ் கமிஷனராக உள்ள சங்கர் ஜிவால், சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
* இவர் நியமிக்கப்பட்டால், சென்னை போலீஸ் கமிஷனராக ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும்.
* சென்னை போலீஸ் கமிஷனர் பதவிக்கு தற்போது டிஜிபி அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளே நியமிக்கப்படுகின்றனர்.
* ஓரிரு நாளில் டிஜிபி அந்தஸ்தில் உள்ள அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

The post உளவுத்துறை, சட்டம் ஒழுங்கு உள்பட 3 ஏ.டி.ஜி.பி.க்கள் அதிரடி மாற்றம்: உளவுப் பிரிவு ஐஜிக்கு கூடுதல் பொறுப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,ADGB ,Arun ,Awadi ,IG ,Dinakaran ,
× RELATED ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக...