×

ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் சுவாமி சிலைகள் உடைப்பு: பெரம்பலூர் அருகே பரபரப்பு

பாடாலூர்: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிக்குளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோயில் உள்ளது. அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த கோயிலில் நேற்றிரவு பூஜை முடிந்து கோயிலை குருக்கள், பணியாளர்கள் பூட்டி விட்டு சென்றனர். இன்று அதிகாலையில் பணியாளர்கள் கோயிலை திறக்க வந்தனர். அப்போது ராட்சத கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, முருகன் சன்னதியிலிருந்த மூன்றரை அடி உயரமுடைய முருகன் கற்சிலை, கால பைரவர் கற்சிலை உடைத்து சேதப்படுத்தப்பட்டு கிடந்தது.

மேலும் திருவிழா காலங்களில் சுவாமி புறப்பாடுக்கு பயன்படுத்தப்படும் சிங்க வாகன சிலையின் வால் பகுதி, கருடாழ்வார் மரச்சிற்பங்கள் சேதப்படுத்தப்பட்டிருந்தது. ஆவணங்கள் உள்ள அறையில் கோயில் புத்தகங்கள் எரிக்கப்பட்டு கிடந்தது. அதிர்ச்சியடைந்த பணியாளர்கள், கோயில் செயல் அலுவலர், இணை ஆணையருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் பாடாலூர் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் விரைந்து சென்று சோதனையிட்டனர்.

கோயிலில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, நேற்று நள்ளிரவு 11.38 மணியளவில் 40 வயது மதிக்கத்தக்க கைலி, சட்டை அணிந்திருந்த ஆண் ஒருவர் கோயிலுக்குள் புகுந்து கொடி மரம் முன் நின்று சுவாமியை நோக்கி திட்டுவதும், பின்னர் சன்னதிகளுக்கு சென்று சிலைகளை உடைத்து சேதப்படுத்துவதும், ஆவணங்களை எரிப்பதும் பதிவாகியிருந்தது. அந்த நபர் ஒரு மணி நேரத்துக்கு பின் கோயிலிலிருந்து வெளியேறுவதும் பதிவாகியிருந்தது. மேலும் விசாரணையில் அந்த நபர் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா மாவிலிங்கை கிராமத்தை சேர்ந்த நல்லுசாமி மகன் செல்வராஜ் என தெரியவந்தது. அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.

The post ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் சுவாமி சிலைகள் உடைப்பு: பெரம்பலூர் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Ekampareswarar Temple ,Perambalur Badalur ,Amman Udunadu ,Alathur Thaluka Chettikulam, Perambalur district ,Swami ,Perambalur ,
× RELATED செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி விழா கோலாகலம்