×

சேரன்மகாதேவியில் காலி மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் கவர்களால் பாழாகும் தாமிரபரணி ஆற்றங்கரை

வீரவநல்லூர்: சேரன்மகாதேவி தாமிரபரணி ஆற்றங்கரையில் பரந்து கிடக்கும் காலி மதுபாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கவர்களால் இயற்கை வளம் பாழாகும் நிலை ஏற்பட்டுள்ளது. சேரன்மகாதேவி பேரூராட்சியின் முக்கிய அடையாளமாக திகழ்வது இங்குள்ள தாமிரபரணி ஆறு மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் மரங்கள் அடர்ந்த ஆற்றுப்படுகையாகும். ஆழமான பகுதி ஏதும் இல்லாமல் அமைதியாக பாய்ந்தோடும் இந்த ஆற்றில் குளிப்பதற்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களிலிருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வர். குறிப்பாக சனி, ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை தினங்களில் இப்பகுதியில் குளிப்பதற்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை படையெடுத்து வருவர்.

இத்தகைய சிறப்பு மிக்க சேரன்மகாதேவி ஆற்றங்கரையில் சமீபகாலமாக குடிமகன்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. ஆற்றங்கரையில் ஆங்காங்கே அமர்ந்து மது அருந்தும் குடிமகன்கள் காலி மதுபாட்டில்களை ஆற்றுக்குள் தூக்கி வீசுவதும், கரையில் போட்டு உடைப்பதும், அடர்ந்த மரங்கள் நிறைந்த பகுதியில் விட்டுச் செல்வதும் தொடர்ந்து வருகிறது. இதனால் ஆற்றுக்கு குளிக்கவரும் பெண்கள் அச்சப்படுவதுடன், உடைந்த கண்ணாடி பாட்டில்களால் பலரது கால்களில் ரத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் குடும்பத்துடன் சுற்றுலா வருபவர்களும் பாலிதீன் கேரி பைகளில் உணவு வாங்கி வந்து பிளாஸ்டிக் பொருட்களை அப்படியே விட்டுச் செல்வதால் ஆற்றின் இயற்கை வளம் பாழாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

குடிமகன்கள் விட்டுச்சென்ற பிளாஸ்டிக் டம்ளர்கள், சுற்றுலா வாசிகள் வீசிச்சென்ற பிளாஸ்டிக் கவர்களால் அடர்ந்த மரங்கள் நிறைந்த பகுதி மாசாக காணப்படுகிறது. இதே நிலை நீடித்தால் சேரன்மகாதேவியின் அடையாளம் அழிந்து போகும் நிலை ஏற்படும். எனவே சுற்றுலா வாசிகள் வசதி கேற்ப ஆற்றுப்படுகையில் குப்பைத்தொட்டிகள் அமைத்து அதை முறையே பேரூராட்சி தூய்மைப்பணியாளர்கள் மூலம் சுத்தப்படுத்தவும், வருவாய்த்துறை சார்பில் ஆற்றங்கரையில் எச்சரிக்கை பலகைகள் அமைத்து குடிமகன்கள் கொட்டத்தை காவல்துறை மூலம் அடக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது இப்பகுதி சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

The post சேரன்மகாதேவியில் காலி மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் கவர்களால் பாழாகும் தாமிரபரணி ஆற்றங்கரை appeared first on Dinakaran.

Tags : serenmagadevi ,Seeranmahadevi ,Tamiraparani River ,ShearanMakadevi ,Dinakarani River ,Dinakaran ,
× RELATED அருமனையில் ஆற்றில் மூழ்கி முதியவர் பலி: குளிக்க சென்றபோது பரிதாபம்