×

சூளகிரி அருகே பட்டிக்குள் புகுந்து செந்நாய் கூட்டம் கடித்து குதறியதில் 13 ஆடுகள் பலி: மாற்றுத்திறனாளி கதறல்

சூளகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே அத்திமுகம் ஊராட்சி புன்னாகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கரப்பா(50). கை ஊனமடைந்த மாற்றுத்திறனாளியான இவரது மனைவி லலிதா. ஊருக்கு ஒதுக்குப்புறமாக வசித்து வரும் இவர்கள், வாழ்வாதாரத்திற்காக செம்மறி ஆடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம், வழக்கம் போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று விட்டு, இரவில் பட்டியில் அடைத்து வைத்திருந்தனர். நேற்று காலை அங்கு சென்ற போது ஆடுகள் கடிபட்ட நிலையில் 10 ஆடுகள் இறந்து கிடந்தன. உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 3 ஆடுகளும் அடுத்தடுத்து உயிரிழந்தன. மேலும், 18 ஆடுகள் காயத்துடன் துடித்துக் கொண்டிருந்தன. இதை கண்டு சங்கரப்பா கதறி துடித்தார்.  இதுகுறித்த தகவலின் பேரில், கால்நடை மருத்துவர்கள் மதுப்பிரியா, நாகராஜ், பேரிகை போலீசார், வனத்துறையினர், பஞ்சாயத்து தலைவர் சுரேஷ், விஏஓ ராஜசேகர் மற்றும் அப்பகுதிக்கு விரைந்து சென்று விசாரித்தனர்.

அப்போது, ஊருக்குள் மர்ம விலங்கு நடமாட்டம் எதுவும் கண்டறியப்படவில்லை. அருகில் உள்ள கரட்டுப்பகுதியில் இருந்து, நள்ளிரவு நேரத்தில் வந்த செந்நாய்கள் கடித்து குதறியதில் ஆடுகள் உயிரிழந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து, ஆடுகளின் உடல் உறுப்புகளை பரிசோதனைக்காக எடுத்துக்கொண்ட மருத்துவர்கள், அப்பகுதியிலேயே குழி தோண்டி புதைத்தனர். மேலும், காயமடைந்த ஆடுகளுக்கு தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர். ஆடு வளர்ப்பையே நம்பியுள்ள நிலையில், உயிரிழந்த ஆடுகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்கி உதவி செய்ய வேண்டுமென சங்கரப்பா கண்ணீருடன் தெரிவித்தார். செந்நாய்கள் கடித்து குதறியதில் 13 ஆடுகள் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post சூளகிரி அருகே பட்டிக்குள் புகுந்து செந்நாய் கூட்டம் கடித்து குதறியதில் 13 ஆடுகள் பலி: மாற்றுத்திறனாளி கதறல் appeared first on Dinakaran.

Tags : Choolagiri ,Shankarappa ,Punnakaram ,Athimugam Panchayat ,Choolagiri, Krishnagiri district ,Dinakaran ,
× RELATED பத்திர எழுத்தர் ஆபிசில் புகுந்த பாம்பு