×

கேஆர்பி அணையில் இருந்து தென்பெண்ணையில் நீர்திறப்பு அதிகரிப்பு

கிருஷ்ணகிரி, ஜூன் 27: கேஆர்பி அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 1086 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதால், தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கேஆர்பி அணை, கெலவரப்பள்ளி அணை, பாம்பாறு அணைகள் மூலம், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. கேஆர்பி அணையில் இருந்து வரும் ஜூலை முதல் வாரத்தில், முதல் போக பயிர் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவுள்ளது.

இதனிடையே, ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணையின் மதகுகள், ₹26 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படுகிறது. இப்பணிகளை மேற்கொள்வதற்காக, கடந்த 24ம் தேதி, அணையில் 41 அடி உயரத்திற்கு தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீரை, 23 அடியாக குறைக்கும் விதமாக, அணையில் இருந்து உபரிநீரை திறக்கும் பணியை கலெக்டர் சரயு துவக்கி வைத்தார். இதன் காரணமாக, அணையிலிருந்து விநாடிக்கு 690 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், கேஆர்பி அணைக்கான நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து, விநாடிக்கு 736 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

முதல் போக பாசனத்திற்கு போதிய தண்ணீரை இருப்பு வைத்து, எஞ்சிய உபரிநீரை அணையில் இருந்து திறந்து விட பொதுப்பணித்துறையினர் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து, நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு, அணையில் இருந்து சிறு மதகுகள் வழியாக, விநாடிக்கு 923கனஅடி தண்ணீரை திறந்துவிட்டனர். நேற்று காலை நீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்பட்டு, 1086 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் மொத்த உயரமான 52 அடியில், தற்போது 50.30 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post கேஆர்பி அணையில் இருந்து தென்பெண்ணையில் நீர்திறப்பு அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : KRP Dam ,South Penna Dam ,Krishnagiri ,Tenpenna river ,
× RELATED வறட்சியால் பாதிக்கப்பட்ட மாமரங்கள் கணக்கெடுப்பு