×

தூக்கிட்டு தற்கொலை செய்த கணவனை மாரடைப்பால் இறந்ததாக நாடகமாடிய குடும்பத்தினர்: வீட்டை காலி செய்ய சொல்வார்கள் என பயந்து போலீசாரிடம் நடித்தது அம்பலம்

பெரம்பூர், ஜூன் 27: வியாசர்பாடி சர்மா நகர் 9வது தெருவை சேர்ந்தவர் கணபதி (42), எலக்ட்ரீஷியன். இவருக்கு ராதிகா (37) என்ற மனைவியும், நித்யானந்தம் (16) என்ற மகனும், சந்தியா (13) என்ற மகளும் உள்ளனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணபதி, உடல் நிலை பாதிக்கப்பட்டு வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இவரது மனைவி ராதிகா டிபன் கடை வைத்து, குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு, இவர் தனது கணவரை மயங்கிய நிலையில், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மருத்துவர்கள் ராதிகாவிடம் கேட்டபோது, நெஞ்சு வலி எனக் கூறினார் என தெரிவித்துள்ளார். இதனையடுத்து கணபதியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது.

நேற்று கணபதியின் உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர் கோகுலகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர், புடவையால் கழுத்தை நெரித்து கணபதி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், எம்கேபி நகர் உதவி கமிஷனர் தமிழ்வாணன் மற்றும் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் உள்ளிட்டோர் இதுபற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது ராதிகா முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தார். போலீசார் இது கொலை வழக்காக மாற்றப்படும் எனக் கூறியதால், அதிர்ச்சியடைந்த ராதிகா உண்மையைக் கூறியுள்ளார். சம்பவத்தன்று வேலை முடிந்து வந்தபோது எனது கணவர் உள்பக்கமாக கதவை தாழிட்டிருந்தார். எனது பிள்ளைகள் அருகில் இருந்த இர்பான் என்பவரை உதவிக்கு அழைத்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, எனது கணவர் படுக்கையறையில் உள்ள மின் விசிறியில் புடவையால் தூக்கில் தொங்கியது தெரிந்தது.

அவரை கீழே இறக்கி மருத்துவமனைக்குக் கொண்டு சென்று காண்பித்தேன். ஆனால் மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். கணவர் தூக்கில் தொங்கி இறந்துவிட்டார் என தெரிந்தால் தங்கியிருக்கும் வீட்டை காலி செய்யச் சொல்வார்கள், மேலும் அவமானமாக இருக்கும் என்பதால் மாரடைப்பால் அவர் இறந்து விட்டார் என தெரிவித்தேன், என போலீசாரிடம் ராதிகா கூறியுள்ளார். மேலும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்தபோது அங்கு சிசிடிவி கேமரா இருந்தது. அதன் பதிவுகளைப் பார்த்தபோது, ராதிகா உள்ளிட்டோர் கதவைத் தட்டுவதும், அதன் பிறகு கதவை உடைத்து உள்ளே செல்வதும், மேலும் உயிரிழந்த கணபதியின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதும் தெளிவாகத் தெரிந்தது. இதனையடுத்து இது கொலை அல்ல தற்கொலை என்பதை போலீசார் உறுதி செய்தனர். பின்பு, இதுபோன்று செய்யக்கூடாது என ராதிகாவுக்கு அறிவுரைகளை வழங்கிய போலீசார், பிரேத பரிசோதனை செய்யப்பட்ட கணபதியின் உடலை குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர்.

The post தூக்கிட்டு தற்கொலை செய்த கணவனை மாரடைப்பால் இறந்ததாக நாடகமாடிய குடும்பத்தினர்: வீட்டை காலி செய்ய சொல்வார்கள் என பயந்து போலீசாரிடம் நடித்தது அம்பலம் appeared first on Dinakaran.

Tags : Ambalam ,Perambur ,Ganapathy ,9th Street ,Vyasarpadi Sharma Nagar ,Radhika ,
× RELATED சுற்றுச்சூழல் அனுமதி பெறும் முன்பே...