×

2022-23ம் அரையாண்டில் மார்ச் 31ம் தேதி வரை செலுத்த தவறிய 3.50 லட்சம் சொத்து உரிமையாளர்கள் நிலுவை வரியை செலுத்த வேண்டும்: மாநகராட்சி அறிவுறுத்தல்

திருவொற்றியூர், ஜூன் 27: தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகள் 2023ன்டி, 2/ 2022-23ம் அரையாண்டுக்குரிய சொத்துவரியை, கடந்த மார்ச் 31ம் தேதிக்குள் செலுத்தாத சொத்து உரிமையாளர்கள் மற்றும் நீண்ட காலமாக சொத்துவரி செலுத்தாமல் நிலுவை வைத்துள்ள சொத்து உரிமையாளர்கள் தற்போது, செலுத்த வேண்டிய நிலுவை சொத்துவரியினை உடனடியாக செலுத்துமாறு சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சொத்துவரியானது, சென்னை மாநகராட்சியின் பிரதான வருவாய் ஆகும். இதன் மூலமே, சென்னை மாநகருக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகள், சுகாதார தூய்மைப் பணிகள், திடக்கழிவுகள் அகற்றுதல், தெரு விளக்குகள், பூங்காக்கள் மற்றும் சாலைகள் பராமரித்தல், பொது சுகாதாரம் நோய் தடுப்பு பணி போன்ற அத்தியாவசிய பணிகள் முதலியவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அரசால், அரசாணை எண்.44, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (தேர்தல்) துறை, நாள்:12.04.2023ல், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (திருத்தம்) சட்டம், 1998, வெளியிடப்பட்டுள்ளது. இச்சட்டம் 13.04.2023 முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பெற்றுள்ளது.

அரசாணை எண்.45, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (தேர்தல்) துறை, நாள்:12.04.2023ன்படி, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகள் 2023, உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகள் 2023, விதியின்படி, அரையாண்டு காலத்திற்குரிய சொத்துவரியினை செலுத்தாதவர்கள் அதாவது கடந்த 2/ 2022-23ம் அரையாண்டுக்குரிய சொத்துவரியை மார்ச் 31ம் தேதிக்குள் செலுத்தாமல் நிலுவை வைத்துள்ள வரித் தொகை மீது, மாதத்திற்கு 1 சதவீதம் தனிவட்டியுடன் சேர்த்து செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் உள்ள 13 லட்சத்திற்கும் மேற்பட்ட சொத்து உரிமையாளர்களில், தற்போது நிலுவை சொத்துவரி செலுத்தாத 3.50 லட்சத்திற்கு மேற்பட்ட சொத்து உரிமையாளர்களின் நிலுவை வரித் தொகை மீது, மேற்படி சட்ட விதிகளின்படி 1 சதவீதம் தனிவட்டி விதிக்கப்பட்டுள்ளது. சட்ட விதிகளின்படி, முந்தைய அரையாண்டு காலம்வரையில் செலுத்தாத நிலுவை வரித் தொகை மீது, நடப்பு அரையாண்டின் ஒவ்வொரு மாதமும் 1 சதவீதம் தனிவட்டி விதிக்க வழிவகை உள்ளதால், சொத்து வரி உரிமையாளர்கள் நிலுவை சொத்துவரியினை எவ்வித சிரமுமின்றி, வழிமுறைகள் மூலம் எளிதாக செலுத்தலாம்.

1வரிவசூலிப்பாளர்களின் மூலமாக, ஸ்வைப்பிங்-வசதியுடன் கூடிய கையடக்ககருவி உதவியுடன், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலமாக செலுத்தலாம். 2மண்டலம்/வார்டு அலுவலகங்களில் அமைந்துள்ள இ-சேவை மையங்களில் சொத்துவரி செலுத்தலாம். 3சென்னை மாநகராட்சியுடன் ஒப்பந்தம் இயற்றியுள்ள குறிப்பிட்ட வங்கிகளில், நேரடியாக பணமாக செலுத்தலாம். 4‘நம்ம சென்னை’ மொபைல் ஆப் மற்றும் ‘பேடிஎம்’ முதலிய கைப்பேசி செயலி மூலமாக செலுத்தலாம்.5BBPS என்ற சேவை மூலமாகவும் சொத்துவரி செலுத்தலாம். 6 சென்னை மாநகராட்சியின் இணையதளம் www.chennaicorporation.gov.in வாயிலாக, இணைய வழி செலுத்துதல் மூலம், பரிமாற்றக் கட்டணம் இல்லாமல் செலுத்தலாம்.

7சொத்து உரிமையாளர்களின் சொத்துவரி சீட்டில் இடம்பெற்றுள்ள க்யூஆர் ஸ்கேன் உதவியுடன் சொத்துவரியினை செலுத்தலாம். 8வருவாய் துறை தலைமையிடத்தில், நிறுவப்பட்டுள்ள KIOSK என்ற தானியங்கி கருவியின் மூலம், சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்துவரி காசோலையினை எளிதாக செலுத்தி, சொத்துவரி ரசீதுகளை பெறலாம். எனவே, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகள் 2023ன்டி, 2/ 2022-23ம் அரையாண்டுக்குரிய சொத்துவரியை, கடந்த மார்ச் 31ம் தேதிக்குள் செலுத்தாத சொத்து உரிமையாளர்கள் மற்றும் நீண்ட காலமாக சொத்துவரி செலுத்தாமல் நிலுவை வைத்துள்ள சொத்து உரிமையாளர்கள்/ உபயோகிப்பாளர்கள், தற்போது, செலுத்த வேண்டிய நிலுவை சொத்துவரியினை மேற்குறிப்பிட்ட வழிமுறைகளின் மூலம் உடனடியாக செலுத்தி, மேற்படி சட்ட விதிகளின்படி செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை மீது, மாதம்தோறும் விதிக்கப்படவுள்ள 1 சதவீதம் தனிவட்டி விதிப்பினை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வருவாய்த்துறை தீவிரம்
சென்னை மாநகராட்சி எல்லைக்குள் 12 லட்சம் பேரின் சொத்து உள்ளது. இதன்மூலம் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ₹1,200 கோடி வருவாய் வசூலிக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது. எனவே, நிலுவையில் உள்ள சொத்து வரியை வசூலிக்க வருவாய் துறை ஊழியர்கள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ஜப்தி நடவடிக்கை
சென்னையில் அதிகளவில் சொத்து வரி நிலுவையில் வைத்துள்ளவர்களின் கட்டிடங்களுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, ₹10 லட்சத்திற்கும் அதிகமாக சொத்து வரி பாக்கி உள்ளவர்களின் பட்டியலை, சென்னை மாநகராட்சி தயார் செய்து, இந்த பட்டியலின்படி நீண்ட நாட்களாக வரி செலுத்தாத சொத்து உரிமையாளர்களின் சொத்தினை சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டத்தின்படி சீல் வைக்கவும், அப்போதும் சொத்து வரியை செலுத்த தவறினால் சொத்துக்களை ஜப்தி செய்ய நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

The post 2022-23ம் அரையாண்டில் மார்ச் 31ம் தேதி வரை செலுத்த தவறிய 3.50 லட்சம் சொத்து உரிமையாளர்கள் நிலுவை வரியை செலுத்த வேண்டும்: மாநகராட்சி அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Thiruvotiyur ,Dinakaran ,
× RELATED வண்ணாரப்பேட்டையில் மரச்சாமான்கள்...