×

11ம் வகுப்பில் எந்த பாடத்தை எடுக்கலாம்? பள்ளி மாணவர்களுக்கு உதவ ‘டயல் பியூச்சர்’ புதிய திட்டம்: ராஜஸ்தான் அரசு அசத்தல்

ஜெய்ப்பூர்: பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், அடுத்ததாக தங்களின் எதிர்கால லட்சியத்தை அடைய எந்த பாடப்பிரிவை தேர்வு செய்வது என்பதில் உதவ ராஜஸ்தான் மாநில அரசின் பள்ளி கல்வித் துறை ‘டயல் பியூச்சர்’ என்ற புதிய திட்டத்தை தொடங்குகிறது. பொதுவாக பத்தாம் வகுப்பிற்கு பிறகு, மேல்நிலை வகுப்பில் விரும்பிய பாடத்தை எடுத்து படிக்கும் வாய்ப்பு அரசு பள்ளி மாணவர்கள் பலருக்கும் கிடைத்து விடுவதில்லை. இதனால் மாணவர்கள் தங்களின் பள்ளிப் பருவத்தில் காணும் எதிர்கால கனவுகள் நனவாகாமல் போகின்றன. இந்த குறையை போக்க, அரசு பள்ளி மாணவர்களிடம் அவர்களின் எதிர்கால லட்சியத்தில் பொறுப்பை ஏற்படுத்த ராஜஸ்தான் மாநில பள்ளி கல்வித் துறை ‘டயல் பியூச்சர்’ எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

இதன்படி, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அவர்களின் எதிர்கால லட்சியத்தை அடையவும், திறமைக்கு ஏற்பவும் மேல்நிலை வகுப்பில் எந்த பாடப்பிரிவை தேர்வு செய்யலாம் என்பது குறித்து ஆலோசனைகள் வழங்கப்படும். பள்ளி கல்வி துறை அமைச்சர் பி.டி.கல்லா மற்றும் இணை அமைச்சர் ஜஹிதா கான் பரிந்துரையின் பேரில் இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்கான கவுன்சலிங் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் நாளை தொடங்கி அடுத்த மாதம் 5ம் தேதி வரை நடக்க உள்ளது. இதில், அனைத்து மேல்நிலைப் பள்ளியிலிருந்து அனுபவமிக்க ஆசிரியர் ஒருவர் வழிகாட்டியாக தேர்வு செய்யப்படுவார். இதுதவிர, மண்டலம் வாரியாக ஹெல்ப் டெஸ்க் அமைக்கப்படும். இந்த ஹெல்ப் டெஸ்க்கில் அனுபவமிக்க ஆசிரியர்கள் 5 பேர் இடம் பெற்றிருப்பர். இவர்கள் மேல்நிலை வகுப்பில் மாணவர்கள் எந்தெந்த பாடப்பிரிவுகளை எடுத்து படிக்கலாம் என அவர்களின் விருப்பம், திறமைக்கு ஏற்ப ஆலோசனை வழங்குவார்கள்.

இது குறித்து, மாநில கல்வி துறை செயலர் நவீன் ஜெயின் கூறுகையில், ‘‘ மதிப்பெண் அடிப்படையில் பாரம்பரிய பாடங்களை மாணவர்கள் தேர்வு செய்வதை விட ஆர்வம், திறனை கருத்தில் கொண்டு பாடப் பிரிவுகளைத் தேர்வுசெய்ய இந்த முயற்சி உதவும். இது பள்ளி மாணவர்கள் மத்தியில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும். ஏனெனில் அவர்கள் தங்கள் இலக்குகளை நிர்ணயித்து அவற்றை அடைவதற்கு கடினமாக உழைக்கத் தூண்டும்’’ என்றார்.

The post 11ம் வகுப்பில் எந்த பாடத்தை எடுக்கலாம்? பள்ளி மாணவர்களுக்கு உதவ ‘டயல் பியூச்சர்’ புதிய திட்டம்: ராஜஸ்தான் அரசு அசத்தல் appeared first on Dinakaran.

Tags : Rajasthan Govt. Jaipur ,Rajasthan Govt Crazy ,Dinakaran ,
× RELATED மகிழ்ச்சியும் ஆனந்தமும் முக்கியம்