×

சூப்பர் ஓவரில் நெதர்லாந்து அமர்க்களம்: ஆல் ரவுண்டர் வான் பீக் ருத்ரதாண்டவம்

* வெ.இண்டீஸ் அதிர்ச்சி

ஹராரே: ஐசிசி உலக கோப்பை தகுதிச்சுற்று ஏ பிரிவு லீக் ஆட்டத்தில், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக சூப்பர் ஓவரில் நெதர்லாந்து அணி த்ரில் வெற்றி பெற்றது. டகாஷிங்கா ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற நெதர்லாந்து முதலில் பந்துவீச… வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 374 ரன் குவித்தது. பிராண்டன் கிங் 76, ஜான்சன் சார்லஸ் 54, கேப்டன் ஷாய் ஹோப் 47, புரூக்ஸ் 25 ரன் எடுத்தனர். அபாரமாக விளையாடிய நிகோலஸ் பூரன் 104 ரன் (65 பந்து, 9 பவுண்டரி, 6 சிக்சர்), கீமோ பால் 46 ரன்னுடன் (25 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

அடுத்து களமிறங்கிய நெதர்லாந்து அணியும் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 374 ரன் எடுத்ததால் ஆட்டம் சரிசமனில் (டை) முடிந்தது. விக்ரம்ஜித் 37, மேக்ஸ் 36, பாஸ் டி லீட் 33, வெஸ்லி 27, லோகன் வான் பீக் 28 ரன் எடுத்தனர். ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பிறந்த தேஜா நிடமனுரு 111 ரன் (76 பந்து, 11 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 67 ரன் (47 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசினர். இதைத் தொடர்ந்து, வெற்றி யாருக்கு என்பதை தீர்மானிக்க சூப்பர் ஓவர் கடைப்பிடிக்கப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அனுபவம் வாய்ந்த ஜேசன் ஹோல்டர் வீசிய அந்த ஓவரில், நெதர்லாந்தின் வான் பீக் 4,6,4,6,6,4 என விளாசித் தள்ள, வெஸ்ட் இண்டீஸ் வெற்றிக்கு 6 பந்தில் 31 ரன் தேவைப்பட்டது. பரபரப்பான அந்த ஓவரை வீசும் வாய்ப்பை பேட்டிங்கில் அமர்க்களப்படுத்திய வான் பீக்கிடமே ஒப்படைத்தார் நெதர்லாந்து கேப்டன் ஸ்காட். முதல் பந்தை சார்லஸ் சிக்சருக்கு தூக்கினாலும், அடுத்த 2 பந்தில் தலா 1 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்த வான் பீக்… 4வது மற்றும் 5வது பந்தில் சார்லஸ், ஷெப்பர்டு விக்கெட்டை வீழ்த்தி த்ரில் வெற்றியை வசப்படுத்தினார். ஆல் ரவுண்டராக அசத்திய வான் பீக் ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார். ஏ பிரிவு லீக் ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில், முதல் 3 இடங்களைப் பிடித்த ஜிம்பாப்வே (8 புள்ளி), நெதர்லாந்து (6), வெஸ்ட் இண்டீஸ் (4) அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறின.

The post சூப்பர் ஓவரில் நெதர்லாந்து அமர்க்களம்: ஆல் ரவுண்டர் வான் பீக் ருத்ரதாண்டவம் appeared first on Dinakaran.

Tags : Netherlands ,Beek Rudratandavam ,West Indies ,Harare ,ICC World Cup Qualifier ,
× RELATED உலக கோப்பை டி20 நியூசி. அணி அறிவிப்பு