×

89 ரன் வித்தியாசத்தில் ஆஸி. அபார வெற்றி: இங்கிலாந்துடன் மகளிர் ஆஷஸ் டெஸ்ட்

நாடிங்காம்: இங்கிலாந்து அணியுடனான மகளிர் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியா 89 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று கோப்பையை கைப்பற்றியது. டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் (ஜூன் 22-26), டாஸ் வென்று பேட் செய்த ஆஸி. அணி முதல் இன்னிங்சில் 473 ரன் குவித்தது. எல்லிஸ் பெர்ரி 99, தாஹ்லியா மெக்ராத் 61, அன்னபெல் சதர்லேண்ட் 137* ரன் விளாசினர். இங்கிலாந்து பந்துவீச்சில் சோபி எக்லஸ்டோன் 5 விக்கெட் வீழ்த்தினார். இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 463 ரன் குவித்து ஆல் அவுட்டானது. பியூமான்ட் 208 ரன், கேப்டன் ஹீதர் நைட் 57, நதாலியே சைவர் பிரன்ட் 78, டேனி வியாட் 44 ரன் எடுத்தனர். ஆஸி. தரப்பில் ஆஷ்லி கார்ட்னர் 4, தாஹ்லியா 3 விக்கெட் கைப்பற்றினர்.

10 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலியா 257 ரன் எடுத்து ஆட்டமிழந்தது. பெத் மூனி 85, லிட்ச்பீல்டு 46, கேப்டன் அலிஸ்ஸா ஹீலி 50 ரன் விளாசினர். சோபி எக்லஸ்டோன் மீண்டும் 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். இதையடுத்து, 268 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து 4ம் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 116 ரன் எடுத்திருந்தது. நேற்று நடந்த கடைசி நாள் ஆட்டத்தில் அந்த அணி 178 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. டேனி வியாட் மட்டும் 54 ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். ஆஸி. பந்துவீச்சில் ஆஷ்லி கார்ட்னர் 20 ஓவரில் 1 மெய்டன் உள்பட 66 ரன் விட்டுக்கொடுத்து 8 விக்கெட் வீழ்த்தினார். ஆஸ்திரேலியா 89 ரன் வித்தியாசத்தில் வென்று மகளிர் ஆஷஸ் கோப்பையை கைப்பற்றியது. 2 இன்னிங்சிலும் சேர்த்து 12 விக்கெட் வீழ்த்திய கார்ட்னர் சிறந்த வீராங்கனை விருது பெற்றார்.

The post 89 ரன் வித்தியாசத்தில் ஆஸி. அபார வெற்றி: இங்கிலாந்துடன் மகளிர் ஆஷஸ் டெஸ்ட் appeared first on Dinakaran.

Tags : Aussies ,Women's Ashes Test ,England ,Nottingham ,Australia ,Dinakaran ,
× RELATED இந்தியருக்கு 16 ஆண்டு சிறை