×

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏற தடை விதித்த பதாகை அகற்றம்: பக்தர்களை அனுமதிக்க தீட்சிதர்கள் மறுப்பு 11 பேர் மீது வழக்கு

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது பக்தர்கள் ஏற அனுமதி இல்லை என தீட்சிதர்கள் வைத்திருந்த பதாகையை அதிகாரிகள் அகற்றினர். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன உத்சவம் நடைபெற்று வரும் வேளையில், கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய தடை விதித்து கடந்த 24ம்தேதி தீட்சிதர்கள் சார்பில் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தது. இதை அகற்ற வேண்டும் என நேற்று முன்தினம் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் வலியுறுத்தினர். ஆனால் தீட்சிதர்கள் பதாகைகளை அகற்ற மறுத்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் தேர் மற்றும் தரிசனம் முடிவுற்று சிவகாமசுந்தரி சமேத நடராஜப்பெருமான் சித்சபைக்கு பிரவேசம் செய்தனர். நேற்று மாலை உதவி கலெக்டர் (பொறுப்பு) பூமா, தாசில்தார் செல்வக்குமார், இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் சந்திரன் ஆகியோர் சிதம்பரம் டிஎஸ்பி ரகுபதி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசாருடன் சென்று கனகசபை படி வாயிலில் இருந்த அறிவிப்பு பதாகையை ஊழியர்கள் மூலம் அதிரடியாக அகற்றினர்.

தொடர்ந்து நேற்று மாலை 6.30 மணி அளவில் போலீசார் மற்றும் இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் கனகசபையை திறந்து பக்தர்களை அனுமதிக்கும்படி தீட்சிதர்களிடம் கூறினர். ஆனால் தீட்சிதர்கள் செயலாளரிடமும், நிர்வாகத்தினரிடமும் பேசி தான் முடிவு எடுக்க முடியும் என்று கூறினர். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 24ம் தேதி பதாகையை அகற்ற சென்ற அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கோயில் செயலாளர் மற்றும் 10 தீட்சிதர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

The post சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏற தடை விதித்த பதாகை அகற்றம்: பக்தர்களை அனுமதிக்க தீட்சிதர்கள் மறுப்பு 11 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Chidambaram Nataraja temple ,Kanagasabha ,Dikshitars' ,Chidambaram ,Dikshitars ,Kanakasabha ,
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயில் பரபரப்பு;...