×

அமைதி நிலவட்டும்

பெலாரஸ் நாட்டின் அதிபர் அலெக்சாண்டர் லூகா ஷென்கோ நடத்திய சமாதான பேச்சுவார்த்தையை தொடர்ந்து, ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளினுக்கும், கூலிப்படை தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜினுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து ரஷ்யாவில் ராணுவ கிளர்ச்சி முடிவுக்கு வந்தது. நாட்டுக்காக பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கும், காசுக்காக பணியாற்றும் கூலிப்படைக்கும் உள்ள வித்தியாசத்தை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

உக்ரைன் போர் விஷயத்தில் ரஷ்யா அடுத்தடுத்து பல்வேறு சறுக்கல்களை சந்தித்து வருகிறது. உக்ரைனுக்கு எதிரான போரை பயன்படுத்தி, ரஷ்யாவுக்கு எதிராக உள்ள நாடுகள் ரஷ்யாவில் உள்நாட்டு போரை கிளப்பி விடும் முயற்சியில் இறங்கியுள்ளது. ‘வாக்னர்’ என்ற தனியார் ராணுவம் ரஷ்யாவுக்கு எதிராக திரும்பிய விஷயத்தில் அமெரிக்காவின் தலையீடு இருந்திருக்க வாய்ப்பு உள்ளது. ரஷ்யாவில் உள்நாட்டு போர் போன்ற சூழலை ஏற்படுத்துவதன் மூலம், அந்நாடு உக்ரைனுக்கு எதிரான போரில் தானாக பலவீனம் அடைந்து விடும்.

இதனால் போரில் உக்ரைன் பலம் பெறும். இது ரஷ்ய மக்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தும். வல்லரசு நாடாக இருந்தும், சிறிய நாட்டை கூட வீழ்த்த முடியவில்லை என்ற பிம்பத்தை ரஷ்யாவுக்கு எதிராக ஏற்படுத்த முடியும். இதன் மூலம் ரஷ்யாவுக்கு சர்வதேச அளவில் பெரிய பின்னடைவு ஏற்படும். உக்ரைனுக்கு எதிரான போரில், ரஷ்யா துவக்க நிலை வெற்றி தந்தாலும், அடுத்தடுத்து பின்னடைவை சந்திக்க வேண்டிய நிலை தொடர்ந்த வண்ணம் உள்ளது கவனிக்க வேண்டிய விஷயம். ரஷ்யா தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ரஷ்ய அதிபர் புடின் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது.

‘வாக்னர்’ படை முகாம் திரும்பியுள்ளது. மீண்டும் அவர்கள் உக்ரைனுக்கு எதிராக போரிட்டாலும், அவர்களுக்கு ஆயுதங்களை ரஷ்யா வழங்குமா என்பது சந்தேகம் தான். குறிப்பாக, நவீன ஆயுதங்களை வாக்னர் படைக்கு வழங்கினால், பின்னர் தங்களுக்கு எதிராக திரும்பலாம் என ரஷ்யா எண்ணுவதால், அவர்களுக்கு நவீன ஆயுதங்கள் வழங்கும் விஷயத்தில் ரஷ்யா இனி விழிப்புடன் இருக்கும். உக்ரைனுக்கு எதிரான போரில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம், உள்நாட்டு பிரச்னைகளை சமாளிக்க வேண்டியது, வளர்ச்சியை தக்க வைப்பது என பல்வேறு பிரச்னைகளை ரஷ்யா சந்தித்து வருகிறது.

இவ்விஷயத்தில் இருந்து ரஷ்யா எப்படி மீள போகிறது என்பது தான் பெரும் கேள்விக்குறியாக உள்ளது. இதனால் ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வாங்குவதில் சுணக்கம் ஏற்படலாம். எனவே இந்தியா ஆயுதங்கள் கொள்முதல் விஷயத்தில் கவனமுடன் செயல்பட வேண்டியது அவசியம். எல்லைகளை கண்காணிக்க அமெரிக்காவிடம் இருந்து அதிநவீன டிரோன்களை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. நாட்டின் எல்லை பகுதிகளில் சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் எந்தெந்த பணிகளை மேற்கொள்கிறது, ஆள் நடமாட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கண்காணிக்க அதிநவீன டிரோன்கள் இந்தியாவுக்கு தேவைப்படுகிறது.

ரஷ்யா போரிட்டு வருவதால், ஆயுத விற்பனை செய்வதில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து நவீன ஆயுதங்களை பெறுவதில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும். அதே நேரம், சிக்கலில் உள்ள நட்பு நாடான ரஷ்யாவுக்கு மறைமுகமாக உதவலாம். போர் நிரந்தர வெற்றியை தராது என்பதை, ரஷ்யா புரிந்து கொண்டு, நாட்டு மக்களின் நலன்கருதி இனி ஆக்கப்பூர்வமான விஷயங்களில் ஈடுபடும் என நம்புவோம்.

The post அமைதி நிலவட்டும் appeared first on Dinakaran.

Tags : Alexander Luka Shenko ,Belarus ,Kremlin ,Dinakaran ,
× RELATED சார்ல்ஸ்டன் ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் ஜெஸிகா பெகுலா