×

பக்ரீத் பண்டிகை நெருங்கும் சூழலில் மனு ஆடு, மாடு வெட்டுவதை எப்படி தடுக்க முடியும்? ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: அனுமதியற்ற இடங்களில் ஆடு, மாடுகள் வெட்டுவதை தடுக்க கோரிய வழக்கில், பக்ரீத் பண்டிகை நெருங்கும் சூழலில் தாமதமாக மனு செய்வது ஏன் என ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. திருச்சி, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகை வரும் 29ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக ஆடு, மாடுகளை பலியிட்டு குர்பானி கொடுப்பர். இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆடு, மாடுகளை இறைச்சிக்காக பலியிடுகின்றனர். கால்நடைகளை பலியிடுவது தொடர்பான நீதிமன்றங்களின் முந்தைய வழிகாட்டுதல்களை யாரும் பின்பற்றுவதில்லை. எனவே, அனுமதியற்ற இடங்களில் ஆடு, மாடுகளை வெட்டி பலியிட தடை விதிக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர், ‘‘கடந்தாண்டு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களே தாக்கல் ெசய்யப்பட்டுள்ளன. பண்டிகை நெருங்கி வரும் சூழலில் ஏன் கால தாமதமாக மனு செய்யப்பட்டுள்ளது? உடனடியாக நடவடிக்கை எடுங்கள் என்றால், எப்படி அவசரமாக நடவடிக்கை எடுக்க முடியும்? கடைசி நேரத்தில் வந்ததன் நோக்கம் என்ன? ஒட்டுமொத்தமாக எப்படி தடை விதிக்க முடியும்’’ என்றனர். பின்னர், ‘‘அனுமதியற்ற இடங்களில் ஆடு, மாடுகள் வெட்டப்படுவதை தடுக்கத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை, திருச்சி மாநகர் போலீஸ் கமிஷனர் தரப்பில் அறிக்கையளிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 17க்கு தள்ளி வைத்தனர்.

The post பக்ரீத் பண்டிகை நெருங்கும் சூழலில் மனு ஆடு, மாடு வெட்டுவதை எப்படி தடுக்க முடியும்? ஐகோர்ட் கிளை கேள்வி appeared first on Dinakaran.

Tags : Bakrit ,ICOURT ,Madurai ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் எந்த கிராமத்தில் மண்...