×

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரை மாற்ற முடிவு கே.எஸ்.அழகிரியின் பதவிக்காலம் நீட்டிக்கப்படுமா? சோனியா காந்தியை சந்திக்க டெல்லியில் முகாம்

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், கே.எஸ். அழகிரியின் பதவிக்காலத்தை நீட்டிப்பது தொடர்பாகவும் டெல்லி மேலிடம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக சோனியா காந்தியை சந்திக்க கேஎஸ் அழகிரி டெல்லியில் முகாமிட்டுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி, நான்கரை ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். கடந்த 25 ஆண்டுகளில் யாரும் இப்பதவியில் 3 ஆண்டுகளுக்கு மேல் நீடித்தது இல்லை. இந்நிலையில்தான், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி கடந்த 2019ம் ஆண்டு பொறுப்பேற்றார்.

அவரது தலைமையின் கீழ் நாடாளுமன்ற தேர்தலில் 8 இடங்களிலும், சட்டமன்ற தேர்தலில் 18 இடங்களிலும் அக்கட்சி வெற்றி பெற்றது. இதனால் தொடர் வெற்றிகளை பெற்றுத் தந்ததால், தலைவர் மாற்றத்தை டெல்லி மேலிடம் விரும்பவில்லை. ஆனாலும், தமிழகத்தில் மற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது. இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் பாஜவை வீழ்த்த வேண்டும் என்பதில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன.

இதனால் 4 மாநில காங்கிரஸ் தலைவர்களை மாற்றம் செய்து காங்கிரசை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை கட்சி தலைமை எடுத்து வருகிறது. எனவே, தமிழ்நாட்டிலும் கே.எஸ்.அழகிரியின் பதவி காலம் நீடித்து செல்வதால் அவரை மாற்றலாமா என்பது குறித்தும் டெல்லி தலைமை பரிசீலித்து வருகிறது. அவர் நியமிக்கப்பட்டு 5 ஆண்டுகள் நெருங்க உள்ள நிலையில், புதிய தலைவர் நியமிக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. எனவே, தலைவர் பதவியை பிடிக்க தமிழ்நாடு காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளிடையே கடும் போட்டி எழுந்துள்ளது. கட்சி தலைமையுடன் முட்டி மோதி வருகின்றனர்.

இதற்காக பல மூத்த தலைவர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் டெல்லியில் உள்ள முக்கிய தலைவர்களை சந்திக்க படையெடுத்த வண்ணம் உள்ளனர். தலைவர் பதவிக்கான போட்டியில் டாக்டர் செல்லக்குமார், சசிகாந்த் செந்தில், விஸ்வநாதன், திருநாவுக்கரசர், கார்த்தி சிதம்பரம், விஜயதரணி உள்ளிட்டவர்கள் பெயர் அடிபடுகிறது. இந்நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவராக யாரை நியமிக்கலாம் என்ற பட்டியல் ஒன்றை டெல்லி தலைமை ஏற்கனவே தேர்வு செய்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த பட்டியலில் இருந்து ஒருவரை தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாகவும் டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனாலும், நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி விட்டதால் இப்போது தலைவரை மாற்றினால் தேர்தலை எதிர்கொள்வது சிரமமாக இருக்கும். எனவே அது குறித்தும் மேலிடம் யோசித்து வருவதாக கூறப்படுகிறது. மறுபுறம் தமிழ்நாடு காங்கிரசுக்கு சரியான தலைவரை தேர்வு செய்யும் பணியும் தீவிரமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, நாடாளுமன்ற தேர்தல் வரை தலைவர் பதவியை தனக்கு நீட்டித்து தர வேண்டும் என்ற கோரிக்கையுடன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி டெல்லியில் முகாமிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் டெல்லி புறப்பட்டு சென்ற அவர் நேற்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலை சந்தித்துவிட்டு, பின்னர் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேச நேரம் கேட்டுள்ளார். அவருக்கு நேரம் ஒதுக்கப்படும் பட்சத்தில் சோனியா காந்தியிடம் தனது கோரிக்கையை தெரிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது, கடந்த தேர்தல்களில் அதிக வெற்றிகளை பெற்று தந்துள்ளதால், வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலை எனது தலைமையில் சந்திக்க வாய்ப்பு தரும்படியும், அதேநேரம் அகில இந்திய தலைமை எடுக்கும் முடிவில் தான் தலையிடப் போவதில்லை என்றும், தன்னை மாற்றும் பட்சத்தில் தனது சார்பில் ஒருவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் சோனியா காந்தியிடம் தனது கோரிக்கையை வலியுறுத்த உள்ளார் என கே.எஸ்.அழகிரி ஆதரவாளர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. அதே நேரம் மற்ற மூத்த நிர்வாகிகள், புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் டெல்லிக்கு படையெடுக்க தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரை மாற்ற முடிவு கே.எஸ்.அழகிரியின் பதவிக்காலம் நீட்டிக்கப்படுமா? சோனியா காந்தியை சந்திக்க டெல்லியில் முகாம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Congress ,President ,KS Azhagiri ,Delhi ,Sonia Gandhi ,Chennai ,K.S. Delhi ,Alagiri ,KS Alagiri ,
× RELATED இந்த தேர்தல் வாழ்வா, சாவா பிரச்னை கபட...