×

குட்கா முறைகேடு வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கோரும் நிலையில் சிபிஐ

சென்னை: குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் பதில் மனுவில் குறைகள் இருந்ததால், அதில் திருத்தம் செய்து தாக்கல் செய்யுமாறு சிபிஐக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் புகையிலை பொருட்களுக்கு கடந்த 2015ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. கடந்த 2016ம் ஆண்டு செங்குன்றம் பகுதியில் மாதவராவ் என்பவருக்கு சொந்தமான குட்கா கிடங்கில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி முக்கிய பிரமுகர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக ஒரு டைரியை பறிமுதல் செய்தனர்.

இந்த சர்ச்சையில் அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் போலீஸ் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் ஆணையர் ஜார்ஜ் மற்றும் ஒன்றிய, மாநில அரசு உயரதிகாரிகள், போலீஸ் உயரதிகாரிகளின் பெயர்களும் இருந்தது. இந்நிலையில் இந்த குட்கா ஊழல் தொடர்பாக திமுக தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டது. 11 பேருக்கு எதிராக தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிக்கையில், பிழை உள்ளதாக கடந்த ஆண்டு சிபிஐ நீதிமன்றம் திருப்பி அளித்தது. இதையடுத்து, 11 பேருக்கு எதிராக சிபிஐ தரப்பில் கூடுதல் குற்றப்பத்திரிகை சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்னும் 2 பேருக்கு எதிராக மட்டும் கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய அனுமதி கிடைக்கவில்லை. ஒன்றிய அரசின் அனுமதி கடிதம் தங்களுக்கு கிடைக்கவில்லை என சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுமதி தொடர்பான கடிதம் கிடைக்காத நிலையில் விசாரணையை எவ்வாறு தொடர்வது குறித்து சிபிஐக்கு நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் வேண்டும் என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையை ஜூலை 17-ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஒன்றிய அரசின் அனுமதி கிடைக்கவில்லை என்பதால் 10-வது முறையாக வழக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post குட்கா முறைகேடு வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கோரும் நிலையில் சிபிஐ appeared first on Dinakaran.

Tags : CBI ,Kudka ,Chennai ,Gudka ,Dinakaran ,
× RELATED நூஹ் பலாத்கார வழக்கு 4...