×

தேங்காய் விலை வீழ்ச்சி முழு தேங்காயாக அரசே கொள்முதல் செய்ய வேண்டும்

*விவசாயிகள் எதிர்பார்ப்பு

பட்டுக்கோட்டை : தேங்காய் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் கவலையடைந்துள்ள தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் முழுதேங்காயாக அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.அரசு கணக்கீட்டின் படி தென்னை உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் 4.577 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டு இரண்டாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் கேரளா உள்ளது. ஆனால் உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. ஒரு காலத்தில் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்துவந்த விவசாயிகள் கடந்த பல வருடங்களாகவே ஒருபோக நெல் சாகுபடிக்கு மாறியதுடன், நெல்லுக்கு மாற்றாக தென்னை சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கியதால் அரசு கணக்கீட்டின்படி 41,000 ஹெக்டேர் பரப்பில் தென்னை பயிரிடப்பட்டுள்ளது.

குறிப்பாக பட்டுக்கோட்டை, பேராவூரணி, மதுக்கூர் பகுதிகளில் சுமார் 39,000 ஹெக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது. பெற்ற பிள்ளை காப்பாற்றாவிட்டாலும் வைத்த தென்னம்பிள்ளை எங்களை காப்பாற்றும் என்று சொன்ன தென்னை விவசாயிகளுக்கு கஜா புயல் ஒரு இடிபோல் அமைந்தது. கஜா புயலுக்கு முன்பு வரை தென்னை விவசாயிகள் பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் அடைந்திருந்தாலும், கஜா புயலுக்கு பிறகு அவர்களுடைய வாழ்வாதாரம் ஒரு கேள்விக்குறியாக இன்றளவிலும் இருந்து வருகிறது.

இதுகுறித்து தென்னை விவசாயிகள் பொன்னவராயன் கோட்டை வீரசேனன், பழஞ்சூர் ராஜகோபாலன், சூரப்பள்ளம் கருணாகரன் ஆகியோர் கூறுகையில், தொடர்ந்து இன்று வரை தேங்காய் உற்பத்தி செய்யக்கூடிய விவசாயிக்கு உரிய விலை கிடைக்காமல் நாளுக்கு நாள் விலை இறக்கமாகவே இருந்து எங்களுடைய வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இந்நிலையில் தென்னைக்கு தற்போது 3 ரூபாய் வரை குறைந்து இன்னும் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றோம்.

நாளுக்கு நாள் உற்பத்தி செய்யக்கூடிய விவசாயிக்கு உரிய விலை கிடைக்காமல் பொருளாதாரத்தில் மிகவும் நலிவடைந்து வருகிறோம். தேங்காய் மட்டை மற்றும் மட்டை சார்ந்த பொருட்களை ஏற்கனவே அதிகளவில் வியாபாரிகள் எடுத்து வந்ததால் தேங்காய்க்கு சற்று கூடுதல் விலை கிடைத்து வந்தது. தற்போது தேங்காய் மட்டை மற்றும் மட்டை சார்ந்த பொருட்களை வியாபாரிகள் வாங்குவதில்லை.காரணம் கஜா புயலுக்கு பிறகு இந்த பகுதியில் இருக்கக்கூடிய கயறு தயாரிக்கும் தொழிற்சாலைகள் பெரும்பாலானவை மூடப்பட்டு வந்ததே. விவசாய வேலைக்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளது. தேங்காய் உற்பத்தியும் அதிகளவில் இருக்கிறது.

தேங்காய் விலை வீழ்ச்சிக்கு காரணம் தேங்காய் மட்டை மற்றும் மட்டை சார்ந்த பொருட்கள் தேங்கியுதும், தொழிலாளர்கள் பற்றாக்குறையும், உற்பத்தி அதிகமும் விலை வீழ்ச்சிக்கு காரணம். எனவே முழு தேங்காயாக அரசே கொள்முதல் செய்து மதிப்பு கூட்டும் பொருளாக மாற்றி தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும். இடைத்தரகர் இல்லாமல் தென்னை உற்பத்தியாளரும், அரசும் நேரடியாக கைகோர்க்க வேண்டும் என்றனர்.

ஒரு தேங்காயை உற்பத்தி செய்ய 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை செலவாகும் என்று தெரிவிக்கும் விவசாயிகள், தற்போது அந்த தேங்காய்க்கு 5 ரூபாய் முதல் 7 ரூபாய் வரையில் மட்டுமே உற்பத்தி செய்யும் தென்னை விவசாயிக்கு கிடைப்பதாக வேதனையுடன் கூறி வருகின்றனர். அரசு உரிய நட வடிக்கை எடுத்து தென்னை விவசாயிகளின் வாழ்வில் ஒளி ஏற்ற வேண்டும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

The post தேங்காய் விலை வீழ்ச்சி முழு தேங்காயாக அரசே கொள்முதல் செய்ய வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Palukkotta ,Thanjavur ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...