×

புதுவையில் இளம் வயதினர் போதைக்கு அடிமையாகி வாழ்க்கையை இழக்கின்றனர்

*முதல்வர் ரங்கசாமி வேதனை

புதுச்சேரி : புதுவையில் இளம் வயதினர் போதை பழக்கத்துக்கு அடிமையாகி வாழ்க்கையை வீணாக்கி வருகின்றனர் என முதல்வர் ரங்கசாமி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் ஜூன் 26ம் தேதி போதை பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, புதுச்சேரி காவல்துறை சார்பில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, நேற்று முன்தினம் சைக்கிள் பேரணி நடந்தது. இதன் தொடர்ச்சியாக, காவல்துறை சார்பில் இருசக்கர வாகன பேரணி நேற்று நடந்தது.

ராஜீவ் காந்தி சதுக்கம் அருகே துவங்கிய இருசக்கர வாகன பேரணியை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்து பேசியதாவது: காவல்துறை சார்பில் போதை பொருள் மற்றும் தீய பழக்கங்களுக்கு அடிமையாகி வருகின்ற பிள்ளைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன பேரணி நடத்துவது தற்சமயத்துக்கு மிகவும் பொருத்தமான ஒன்று. ஏனென்றால், புதுச்சேரியில் இப்போது போதை பொருட்களுக்கு இளம் வயது பிள்ளைகள் அடிமையாகி வருகின்றனர். அதனால் ஏற்படுகின்ற விளைவுகள் என்னவென்று தெரியாமல் அவர்கள் தங்களது வாழ்க்கையை வீணாக்கி வருகின்றனர். படிக்க வேண்டிய இளம் வயதில் தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளாகி வருவது என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

தீய பழக்க வழக்கத்தை அடியோடு ஒழிக்க வேண்டியது மிகவும் அவசியம். நாங்கள் எத்தனை கட்டுப்பாடுகளை கொண்டு வந்தாலும், இதுபோன்ற விழிப்புணர்வு மிகவும் முக்கியம். இப்பழக்க வழக்கங்களால் ஏற்படுகின்ற விளைவு என்ன என்பதை பிள்ளைகள் தெரிந்து கொள்ள வேண்டும். இதனை பெற்றோர்கள் அறிந்து கொண்டு பிள்ளைகளை வளர்ப்பதற்குரிய நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். போதை பொருட்களுக்கு அடிமையான பிள்ளைகள் தங்களையே அறிந்து கொள்ளாத நிலையில் குற்றங்கள் செய்வதை சில நேரங்களில் உணர முடிகிறது.

போதை பொருட்கள் மூலம் ஏற்படுகின்ற உணர்வு என்பதும் சுட்டிக்காட்ட வேண்டிய ஒன்றாக உள்ளது. அந்த நிலையில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணம் இருப்பதாக மற்றவர்கள் கூறுவது மிகவும் வருத்தப்பட வேண்டிய உண்மையாகும். அப்படிப்பட்ட போதை ெபாருட்களுக்கு அடிமையாகி வருகின்ற இளம் வயது பிள்ளைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்த குற்றங்களால் நம்முடைய நாட்டின் வளர்ச்சி எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்று சிந்திக்கக்கூடிய நிலையில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். படிக்க வேண்டிய வயதில் பிள்ளைகள் படிக்க வேண்டும்.

காவல்துறையின் இந்த பேரணி பயனுள்ளதாக இருக்கும். போதை பொருட்கள் மூலம் ஏற்படுகின்ற தீய பழக்க வழக்கங்களை தடுப்போம். இதனை விழிப்புணர்வு பேரணி மூலம் அறிவுறுத்துவோம். இது கடுமையாக எதிர்க்க வேண்டிய ஒன்று என்பதை பிள்ளைகளுக்கு உணர்த்தி, அதன்மூலம் போதை பொருள் பழக்கத்துக்கு ஆளான இளம் வயதினரை திருத்த வேண்டும். இந்த பழக்க வழக்கத்திற்கு இளைஞர்களை ஆளாக்குகின்ற முக்கிய நபர்களை கண்டித்து, அறவே ஒழிக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ், ஏடிஜிபி ஆனந்தமோகன், சட்டம்-ஒழுங்கு சீனியர் எஸ்.பி. நாரா.சைதன்யா, கிழக்கு எஸ்.பி. ஸ்வாதி சிங், வடக்கு எஸ்.பி. பக்தவச்சலம், போக்குவரத்து எஸ்.பி. மாறன், ஆயுதப்படை எஸ்.பி. ராஜேஷ், இன்ஸ்ெபக்டர்கள் பாலமுருகன், ஜெய்சங்கர் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

ராஜீவ் காந்தி சதுக்கம் அருகே தொடங்கிய பேரணி வழுதாவூர் சாலை, மூலகுளம், ரெட்டியார்பாளையம், வில்லியனூர் பைபாஸ், ரெட்டியார்பாளையம், இந்திரா காந்தி சதுக்கம், 100 அடி சாலை, கடலூர் சாலை, முருங்கப்பாக்கம் சந்திப்பு, மரப்பாலம் சந்திப்பு, முதலியார்பேட்டை, உப்பளம் சாலை, கடற்கரை சாலை வழியாக சென்று காந்தி சிலையில் நிறைவடைந்தது. இதில் 200க்கும் மேற்பட்ட காவலர்கள் கலந்து கொண்டனர்.

The post புதுவையில் இளம் வயதினர் போதைக்கு அடிமையாகி வாழ்க்கையை இழக்கின்றனர் appeared first on Dinakaran.

Tags : Puduvai ,Principal ,Rangaswamy Angam Puducherry ,Dinakaran ,
× RELATED புதுவை முழுவதும் முககவசம் கட்டாயம்...