×

மலைவாழ் மக்களின் கோரிக்கையின்படி தெள்ளை- ஜார்தான்கொல்லை இடையே தார்சாலை அமைக்கப்படும்

*ஆய்வு செய்த கலெக்டர், எம்எல்ஏ உறுதி

அணைக்கட்டு : வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஒன்றியத்தில் பீஞ்சமந்தை, பலாம்பட்டு, ஜார்த்தான்கொல்லை ஆகிய ஊராட்சிகள் உள்ளன. இதில் 70க்கும் மேற்பட்ட மலை குக்கிராமங்கள் உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். தற்போது, முத்துக்குமரன் மலை அடிவாரத்தில் இருந்து பீஞ்சமந்தை மலை வரை தார்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில், ஜார்த்தான்கொல்லை ஊராட்சி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் மலைவாழ் மக்கள் தெள்ளை வழியாக செல்லும் வழியை பயன்படுத்தி மலை அடிவாரத்திற்கு வருகின்றனர். பீஞ்சமந்தை மலை வழியைவிட இந்த தெள்ளை- ஜார்த்தான்கொல்லை செல்லும் மலை வழி பாதை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் ஜார்த்தான்கொல்லை மற்றும் சுற்றியுள்ள மலையில் வசிக்கும் மக்கள் அடிவாரத்தில் இருந்து மலைக்கு செல்ல மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே, தெள்ளை- ஜார்தான்கொல்லை செல்லும் வழியை சீரமைத்து தார்சாலை ஏற்படுத்த வேண்டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதுகுறித்து தினகரன் நாளிதழிலும் படத்துடன் விரிவான செய்தி வெளியானது. இந்நிலையில், நேற்று முன்தினம் இந்த தெள்ளை- ஜார்தான்கொல்லை செல்லும் மலை வழி பாதையை கலெக்டர் குமாரவேல் பாண்டியன், எம்எல்ஏ நந்தகுமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, செயற்பொறியாளர் செந்தில்குமார், மாவட்ட ஊராட்சி செயலாளர் வேதநாயகம், பிடிஓக்கள் சுதாகரன், சாந்தி, தாசில்தார் வேண்டா, கணியம்பாடி ஒன்றியக்குழு துணைத்தலைவர் கஜேந்திரன், ஜார்த்தான்கொல்லை ஊராட்சி மன்ற தலைவர் லதா ராஜசேகர் மற்றும் ஊரக வளர்ச்சி, வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இதில், பீஞ்சமந்தை மலையில் இருந்து ஜார்த்தான்கொல்லை வரை 6 கிலோ மீட்டர் தூரம் காரிலும், அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் பைக்கிலும் சென்று ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து, அங்கிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு மலையில்இருந்து அடிவாரம் வரை கலெக்டர், எம்எல்ஏ மற்றும் அதிகாரிகள் நடந்தபடியே கீழே இறங்கி வந்து மலை வழி பாதையை ஆய்வு செய்தனர்.

அப்போது, அவ்வழியாக விறகுகளை தலையில் சுமந்தபடி வந்த மலைவாழ் மக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தனர். அதற்கு அவர்கள் இந்த மோசமான நிலையில் உள்ள பாதையில் தான் தினந்தோறும் சென்று வருகிறோம் என வேதனை தெரிவித்தனர்.உடனே கலெக்டர் விரைவில் சாலை வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர், அங்கு தார்சாலை அமைப்பது தொடர்பாக கலெக்டர், எம்எல்ஏ மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

பின்னர், தெள்ளை- ஜார்தான்கொல்லை வரை எத்தனை கிலோ மீட்டர் தூரம் உள்ளது. சாலை அமைக்க எவ்வளவு இடம் தேவை, அதில் எத்தனை இடங்களில் வளைவுகள், பாறை இடுக்குகள் உள்ளது என கணக்கெடுத்து திட்ட மதிப்பீடை தயார் செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பீஞ்சமந்தை மலைக்கு தார்சாலை வசதி ஏற்படுத்த இருக்கிறது. அதேபோல், தெள்ளையில் இருந்து ஜார்த்தான்கொல்லை வரை மலை வழிப்பாதை சீரமைத்து சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அந்த இடம் வனத்துறையில் இருப்பதால் திட்ட மதிப்பீடு தயார் செய்து அனுமதி பெற்று ஜார்த்தான்கொல்லை மலைக்கு சாலை அமைக்கும் பணி தொடங்கும் என்றனர்.

The post மலைவாழ் மக்களின் கோரிக்கையின்படி தெள்ளை- ஜார்தான்கொல்லை இடையே தார்சாலை அமைக்கப்படும் appeared first on Dinakaran.

Tags : Tharsala ,Tellai ,Jharthankollai ,MLA ,Vellore district ,Bhinjamanthi ,Palampattu ,Jhartankollai ,Tharsal ,Tellai-Jhartankollai ,Dinakaran ,
× RELATED தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் ரூ.84.70...