×

தீபத்திருவிழா தெப்பல் உற்சவம் நடைபெறும் ஐயங்குளத்தை சீரமைக்கும் பணி தீவிரம்

 

*அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா தெப்பல் உற்சவம் நடைபெறும் ஐயங்குளத்தை தூர்வாரி சீரமைக்கும் பணியை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார்.பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைக்க முக்தி தரும் ஆன்மிக தலமாகவும் அமைந்திருக்கிறது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில். அடிக்கொரு லிங்கம் அமைந்த புண்ணிய பூமி என்று போற்றப்படும் திருவண்ணாமலையில் 100க்கும் மேற்பட்ட புனித தீர்த்தங்கள் உள்ளன.

அதில், அண்ணாமலையார் கோயில் விழாக்களுடன் நேரடி தொடர்பு கொண்ட ஐயங்குளம் மிகவும் பிரசித்தி பெற்ற தீர்த்தமாகும். ஐயங்குள தெருவில் உள்ள ஐயங்குளத்தை இந்திர தீர்த்தம் எனவும் அழைக்கின்றனர். சித்திரை உற்சவம், ஆனி பிரமோற்சவம் உள்பட ஆண்டுக்கு 5 முறை ஐயங்குளத்தில் சுவாமி தீர்த்தவாரி நடைபெறும். குறிப்பாக, பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழாவின் நிறைவாக தொடர்ந்து 3 நாட்கள் ஐயங்குளத்தில் தெப்பல் உற்சவம் நடைபெறுவது சிறப்புக்குரியது.

இந்நிலையில், சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் 40 அடி ஆழத்தில் உள்ள ஐயங்குளம் கட்டுமான அமைப்பில் தனித்துவம் பெற்றது. 4 புறமும் படிகள், குளத்துக்கு வந்து செல்லும் வாயில்கள், குளத்தின் கரையில் சுவாமி எழுந்தருளும் காட்சி மண்டபம் என்று பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. ஆனால், நீண்ட காலமாக முறையாக குளத்தை பராமரிக்காததால் அதில் தேங்கி உள்ள தண்ணீர் சுகாதாரமற்று பாசி படர்ந்துள்ளன. குறிப்பாக கடந்த 2016ம் ஆண்டு இக்குளத்தில் நடந்த மஹோதய அமாவாசை வழிபாட்டின்போது குளத்தில் மூழ்கி 4 பேர் இறந்த துயர சம்பவத்துக்கு பிறகு முறையான பராமரிப்பு இல்லாமல் உள்ளன. எனவே, ஐயங்குளத்தை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

எனவே, அண்ணாமலையார் கோயில் தீர்த்தவாரி மற்றும் தெப்பல் உற்சவ வழிபாடுகள் நடைபெறும் ஐயங்குளத்தை தூர்வாரி சீரமைக்கவும், முறையான பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும், குளத்தை தூர்வாரும் பணி தூய்மை அருணை சார்பில் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதையொட்டி, ஐயங்குளத்தில் பாசி படர்ந்து தேங்கியிருந்த தண்ணீர் முழுவதும் கடந்த 20 நாட்களுக்கு மேலாக மின் மோட்டார்கள் மூலம் வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து, குளத்தில் தேங்கியிருக்கும் சேறும், சகதியும் அகற்றப்பட்டு சீரமைக்கப்பட உள்ளன.

இந்நிலையில், ஐயங்குளத்தை தூர்வாரும் பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று காலை நேரில் ஆய்வு செய்தார். அப்போது, குளத்தில் தேங்கியிக்கும் சகதிகள் முழுவதையும் அகற்ற வேண்டும். சிதைந்திருக்கும் படிக்கற்களை சீரமைக்க வேண்டும். குளத்தின் நடுவில் நந்தி சிலை அமைத்து பாதுகாப்பு தடுப்பு வேலிகள் ஏற்படுத்த வேண்டும். நான்கு நுழைவு வாயில்களிலும் மின்னொளி வசதி ஏற்படுத்த வேண்டும். மேலும், குளத்தில் இருந்து வெளியேற்றப்படும் மண் மற்றும் சகதிகளை லாரிகள் மூலம் கொண்டு சென்று பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத பகுதியில் சேர்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.

ஆய்வின்போது கலெக்டர் பா.முருகேஷ், மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே.கம்பன், எம்பி சி.என்.அண்ணாதுரை, தலைமை செயற்குழு உறுப்பினர் ரா.ஸ்ரீதரன், நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன், மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜயரங்கன், துரைவெங்கட், குட்டி புகழேந்தி, ஏ.ஏ.ஆறுமுகம், டிஎஸ்ஆர் ராம்காந்த், சு.ராஜாங்கம், நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் மோகனசுந்தரம், நகராட்சி ஆணையர் தட்சிணாமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post தீபத்திருவிழா தெப்பல் உற்சவம் நடைபெறும் ஐயங்குளத்தை சீரமைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Aiyangulam ,Deepatri Vizha Tepal Utsavam ,Minister ,A.V.Velu ,Thiruvannamalai ,Deepatri festival ,Tepal Utsavam ,Tiruvannamalai ,
× RELATED தமிழகத்தை சேர்ந்தவர் ஒடிசாவை ஆள வேண்டுமா? : ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கேள்வி