×

திருச்சி அருகே கோர விபத்து அரசு பஸ் மீது கார் மோதல் 5 பேர் உடல் நசுங்கி பலி

 

துவரங்குறிச்சி : திருச்சி அருகே நேற்று அரசு பஸ் மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் பலியாயினர். பஸ் பயணிகள் 43 பேர் காயமடைந்தனர்.திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள கே.உடையாபட்டியை சேர்ந்த முத்தமிழ்செல்வன் (48), ஐயப்பன் (20), மணிகண்டன்(35), நாகரத்தினம் (36) மற்றும் பில்லூரை சேர்ந்த மெக்கானிக் தீனதயாளன் (20) ஆகிய 5 பேரும் நேற்று மாலை 5.30மணியளவில் காரில் திண்டுக்கல்லுக்கு சென்று விட்டு திருச்சிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். காரை தீனதயாளன் ஓட்டினார்.

கார் திருச்சி மாவட்டம் வையம்பட்டி கொத்தனூர் என்ற இடமருகே சென்ற ேபாது காரின் முன்பக்க டயர் வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சென்டர் மீடியனை தாண்டி எதிர்திசையில் திருச்சியிலிருந்து திண்டுக்கல்லுக்கு சென்று கொண்டிருந்த அரசு பஸ் மீது மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. மேலும் பஸ் டிரைவரும் திடீர் பிரேக் போட்டதால் பஸ்சும் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் காரில் வந்த 5 ேபரும் இடிபாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் பஸ் டிரைவர் ராஜேந்திரன், கண்டக்டர் பிரகாஷ் உள்பட பஸ்சில் வந்த 43 பயணிகள் காயமடைந்தனர்.

தகவலறிந்து வந்த வையம்பட்டி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காயமடைந்த 43 பேரும் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து வையம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த விபத்தால் திருச்சி – திண்டுக்கல் சாலையில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருச்சி எஸ்பி சுஜித்குமார், மணப்பாறை டிஎஸ்பி ராமநாதன், ரங்கம் ஆர்டிஓ தட்சிணாமூர்த்தி ஆகியோர் அங்கு வந்து மீட்பு பணிகளை பார்வையிட்டனர். ரங்கம் தொகுதி எம்எல்ஏ பழனியாண்டியும் சம்பவ இடம் வந்து விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ₹.2 லட்சம் நிதியுதவி

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: விபத்தில் 5 பேர் இறந்த துயர சம்பவம் குறித்து அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ₹.2 லட்சம் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

The post திருச்சி அருகே கோர விபத்து அரசு பஸ் மீது கார் மோதல் 5 பேர் உடல் நசுங்கி பலி appeared first on Dinakaran.

Tags : Trichy ,DUARANKRICHI ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...