×

பரமத்திவேலூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்து 1,500 பாக்கு மரங்கள் நள்ளிரவில் வெட்டி சாய்ப்பு

*மர்ம கும்பல் அட்டூழியம்; மீண்டும் பதற்றம்

பரமத்திவேலூர்: பரமத்திவேலூர் அருகே, நேற்று முன்தினம் இரவு தோட்டத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள், 1,500 பாக்கு மரங்களை அடியோடு வெட்டி சாய்த்ததால், அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே கரப்பாளையத்தில், கடந்த மார்ச் மாதம் 11ம் தேதி, இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில், போலீசார் 17 வயது சிறுவனை கைது செய்து சிறையிலடைத்தனர்.

உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யக்கோரியும், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரியும், அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மார்ச் 14ம் தேதி ஜேடர்பாளையத்தைச் சேர்ந்த முத்துசாமி என்பவரது வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்டகையில் பணிபுரிந்த தொழிலாளரகள் மீது, பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ராகேஸ்(19) என்பவர் உயிரிழந்தார். மேலும், 3 பேர் காயம் அடைந்தனர். இதனைத்தொடர்ந்து ஆலை கொட்டகை அருகே, முத்துசாமியின் மருமகன் தோட்டத்தில் இருந்த சுமார் 600க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டது.

மேலும், டிராக்டர் மற்றும் பள்ளி வாகனத்திற்கு தீ வைப்பு, வீடுகள் மீது பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணை குண்டு வீச்சு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்றன. தொடர் அசம்பாவித சம்பவங்களை தொடர்ந்து, போலீசார் அப்பகுதிகளில் 600 போலீசார் குவிக்கப்பட்டு 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இதனால், சகஜ நிலை திரும்பிதால் பாதிக்கும் மேற்பட்ட போலீசார் விலக்கிக் கொள்ளப்பட்டனர். அனைத்து சோதனைச்சாவடிகளிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், அப்பகுதியில் மீண்டும் அசம்பாவிதங்கள் தலை தூக்கியுள்ளது. பரமத்திவேலூர் அருகே பொத்தனூரைச் சேர்ந்த சவுந்தராஜன் என்பவருக்கு சொந்தமான தோட்டம், சின்னமருதூரில் உள்ளது. அங்கு 2 ஏக்கரில் பாக்கு மரங்கள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு, தோட்டத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள், 1,500 பாக்கு மரங்களை அடியோடு வெட்டி சாய்த்துள்ளனர். இதேபோல், அப்பகுதியில் உள்ள தங்கமுத்து, சுப்ரமணி, இளங்கோவன், ராமலிங்கம், சாமியப்பன், செந்தில் ஆகியோரது தோட்டத்திற்குள் புகுந்து பம்பு செட் குழாய்களை அரிவாளால் வெட்டி சேதப்படுத்தியுள்ளனர். மேலும், வழி நெடுகிலும் மரவள்ளி செடிகளையும் பரவலாக வெட்டி வீசி சென்றுள்ளனர்.

இதுகுறித்த தகவலின்பேரில், எஸ்பி ராஜேஸ்கண்ணா தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். நாமக்கல்லில் இருந்து மோப்பநாய் ஷீபா வரவழைக்கப்பட்டு துப்பு துலக்க விடப்பட்டது. அந்த நாய் தோட்டம் முழுவதும் ஓடிச்சென்று, மெயின் ரோட்டிற்கு போய் நின்று கொண்டது. தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் அங்கு பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தனர். கால் தடங்களை வைத்து பார்க்கும்போது 10க்கும் மேற்பட்டோர் நாச வேலையில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு பணிகளை நேற்று மாலை கோவை மேற்கு மண்டல ஐஜி சுதாகர் நேரில் பார்வையிட்டு, ஜேடர்பாளையம் காவல் நிலையத்தில் ஆலோசனை நடத்தினார். ஆப்போது, எஸ்பி ராஜேஸ்கண்ணா, டிஎஸ்பி ராஜமுரளி உள்ளிட்டோர் உடனிருந்தனர். முன்னதாக சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரியும் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரித்தார்.

100 நாளில் மீண்டும் நாசவேலை ஆரம்பம்

கடந்த மார்ச் மாதம் 11ம் தேதி, இளம்பெண் பாலியல் பலாத்கார கொலை சம்பவத்தை தொடர்ந்து மார்ச் 14ம் தேதி ஆலை கொட்டாய்கு தீ வைக்கப்பட்டதில் வடமாநில தொழிலாளி உயிரிந்தார். இதையடுத்து, அடுக்கடுக்கான குற்றச்செயல்கள் நடைபெற்ற வந்த நிலையில், அப்பகுதியில் 600க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். அமைதி திரும்பியதால் போலீஸ் பாதுகாப்பு பாதியாக குறைக்கப்பட்டது.

இளம்பெண் கொலை சம்பவம் நடைபெற்று சரியாக 100 நாட்கள் கடந்த நிலையில், மீண்டும் மர்ம நபர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண் கொலை தொடர்பாக சிபிசிஐடி போலீஸ் விசாரணை தனியாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், ஏனைய சம்பவங்கள் குறித்து உள்ளூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதில், 100 நாட்களாகியும் எந்தவித துப்பும் கிடைக்காமல் போலீசார் திணறி வரும் நிலையில், குற்றச்செயல்கள் நடைபெற்றுள்ளதால் காவல்துறையினர் கலக்கமடைந்துள்ளனர்.

The post பரமத்திவேலூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்து 1,500 பாக்கு மரங்கள் நள்ளிரவில் வெட்டி சாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Paramathivelur ,
× RELATED கார்பைடு கல்லால் பழுக்க வைத்த 100 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்