×

போதையற்ற கிராமமாக மாற்ற தேவிபட்டணத்தில் ஆலோசனை கூட்டம்

சிவகிரி: தேவிபட்டணம் கிராமத்தை போதையற்ற கிராமமாக மாற்ற ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றித்திற்கு உட்பட்ட தேவிபட்டணத்தில் இருந்த டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இக்கோரிக்கையை தென்காசி கலெக்டர் துரை. ரவிச்சந்திரன் ஏற்றுக்கொண்டு தேவிபட்டணம் டாஸ்மாக் கடையை மூட உத்தரவிட்டார். இந்நிலையில் தேவிபட்டணத்தை போதையற்ற கிராமமாக மாற்றுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தேவிபட்டணம் ஆர்.சி.துவக்கப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்றத் தலைவர் ராமராஜ் தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் ஜெயராஜ் வரவேற்றார். வாசுதேவநல்லூர் காவல் ஆய்வாளர் மகேஸ்வரி, வருவாய் ஆய்வாளர் சரவணக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தேவிபட்டணத்தில் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களை அந்தந்த சமுதாய பொறுப்பாளர்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். கிராமத்தில் யாராவது சட்ட விரோதமாக மது பாட்டில் விற்கிறார் என்று காவல் துறை கைது செய்தால் அவர் எந்த சமுதாயத்தை சார்ந்தவரோ அந்த சமுதாயத்தினருக்கு காவல்துறை எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதி வழங்காது. கிராமத்தில் அவர் சார்ந்த சமூகத்தில் இருந்து ஊராட்சி நிர்வாகத்திற்கு கடிதம் கொடுக்க வேண்டும். அந்த கடிதத்தின் அடிப்படையில் ஊராட்சி நிர்வாகம் மதுபாட்டில்கள் விற்பவர் வீட்டில் குடிநீர் மற்றும் மின்சாரம் இணைப்பு துண்டிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் ராமராஜ், தங்கராஜ், கிரேஸ், முத்துலட்சுமி, தங்கராஜ், கனிதம்மாள், குருசாமி, கோபால், பூங்கோதை, கனகஜோதி, முத்துமாரி மற்றும் அனைத்து சமுதாய பொறுப்பாளர்கள், ஊர் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

The post போதையற்ற கிராமமாக மாற்ற தேவிபட்டணத்தில் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Devipatnam ,Sivagiri ,Tasmac ,Vasudevanallur ,Dinakaran ,
× RELATED தேவிபட்டணம் காளியம்மன் கோயில் குளத்தை அமலைச் செடிகள் ஆக்கிரமிப்பு