×

செவித்திறன் குறையுடையோருக்கான அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை துவக்கம்: செங்கல்பட்டு கலெக்டர் தகவல்

 

செங்கல்பட்டு, ஜூன் 26: செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வு துறையால் நடத்தப்படும் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளியானது 8கி, ஹோம் ரோடு ஜட்ஜ் காலணி தாம்பரம் சானடோரியம், சென்னை-47 என்ற முகவரியில் இயங்கி வருகிறது. இப்பள்ளி காது கேளாத வாய் பேசாத மாற்றுத்திறனாளி மாணவர்கள் முன்பருவ பள்ளி முதல் எட்டாம் வகுப்பு வரை சேர்ந்து பயிலும் வண்ணம் அமைந்துள்ளது. பள்ளியில் 3 வயது முதல் 15 வரை உள்ள குழந்தைகள் ஆண், பெண் இருபாலரும் சேர்ந்து படிக்கலாம்.

இப்பள்ளி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மாணவ, மாணவியர் வந்து தங்கிப் பயிலும் வண்ணம் தனித்தனி விடுதி வசதியுடன் கூடிய பள்ளியாகும். இப்பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் காது கேளாத, வாய் பேசாத மாணவர்களுக்கென கற்பிக்க சிறப்பு பயிற்சி பெற்றவர்கள். தமிழ், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என பாடங்களோடு பேச்சுப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. விடுதியில் மூன்று வேளையும் சத்தான சமச்சீர் உணவும், சோப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்படுகின்றன. தமிழக அரசால் வழங்கப்படும் ஆண்டு கல்வி உதவித்தொகை, இலவச காதொலி கருவி, விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், சீருடை, புத்தகப்பை, காலணிகள் மற்றும் பிற கல்வி உபகரணங்கள், இலவச பேருந்து பயணச் சலுகை என அனைத்து நலத்திட்டங்களும் வழங்கப்படுகின்றன.

எனவே காது கேளாத, வாய் பேசாத மாற்றுத்திறன் கொண்ட மாணவ,மாணவியர் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். இப்பள்ளியில் சேர்க்கை பெற தலைமை ஆசிரியர் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி 8 கி ஹோம் ரோடு ஜட்ஜ் காலணி தாம்பரம் சானடோரியம், சென்னை-47 எனும் முகவரியில் சென்று அணுகலாம். மேலும், விவரம் வேண்டுவோர் பள்ளி அலுவலகத்தை 044-2223 0327 என்கிற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு விவரங்கள் அறியலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post செவித்திறன் குறையுடையோருக்கான அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை துவக்கம்: செங்கல்பட்டு கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Government School for Hearing Impaired ,Chengalpattu ,District Collector ,Rahul Nath ,Tamil Nadu Government ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்த கிராம...