×

மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் சிறுதானிய உணவகம் அமைக்க விண்ணப்பிக்கலாம்: காஞ்சிபுரம் கலெக்டர் அறிவிப்பு

 

காஞ்சிபுரம்: மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் சிறுதானிய உணவகம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2023ம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்படுவதால், தமிழ்நாடு அரசு சிறுதானிய உணவு வகைகளை பிரபலப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் மூலம் சிறுதானிய உணவகம் அமைக்கப்பட உள்ளது.

மகளிர் சுய உதவிக்குழு துவங்கப்பட்டு, குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் முடிவுற்றிருக்க வேண்டும். கூட்டமைப்பாக இருக்கும் பட்சத்தில் தர மதிப்பீடு செய்யப்பட்டு ஏ அல்லது பி சான்று பெற்றிருக்க வேண்டும். உற்பத்தியாளர் குழுவாக இருக்கும் பட்சத்தில் தரமதிப்பீடு செய்யப்பட்டு திட்ட நிதி பெறப்பட்டிருக்க வேண்டும். மகளிர் சுய உதவிக்குழு, உற்பத்தியாளர் குழு, கூட்டமைப்பு சிறுதானிய உணவு, உற்பத்தி மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பில் ஆர்வமுள்ள மற்றும் முன் அனுபவம் உடையவராக இருக்க வேண்டும். மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் அமைந்துள்ள அல்லது அதனை சுற்றியுள்ள ஊராட்சியின் மகளிர் சுய உதவிக்குழு, உற்பத்தியாளர் குழு, கூட்டமைப்பாக மட்டுமே இருக்க வேண்டும்.
தகுதியான சுய உதவிக்குழு உறுப்பினர்கள் திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மகளிர் திட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், காஞ்சிபுரம் 631 501 என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு உதவி திட்ட அலுவலர் (வாழ்வாதாரம்) 94440 94285 மற்றும் உதவி திட்ட அலுவலர் (நிதி உள்ளாக்கம்) 94440 94283 ஆகியோரை தொடர்பு கொண்டு தங்களது தகவல்களை பதிவு செய்து கொண்டு மகளிர் திட்டத்தின் மூலம் ஏற்படுத்தி தரப்படும் அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

The post மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் சிறுதானிய உணவகம் அமைக்க விண்ணப்பிக்கலாம்: காஞ்சிபுரம் கலெக்டர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Women SHG ,Kanchipuram ,Women Self Help Group ,Kalachelvi Mohan ,
× RELATED காஞ்சிபுரம் அண்ணா நினைவு பூங்கா சீரமைப்பு