×

சென்னையில் வெள்ள பாதிப்பை தடுக்க கொசஸ்தலை மற்றும் ஆரணி ஆறுகளை இணைக்க திட்டம்: நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்

 

சென்னை, ஜூன் 26: சென்னையில் வெள்ள பாதிப்பை தடுக்க, கொசஸ்தலை, ஆரணி ஆறுகளை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வடகிழக்கு பருவமழை காலங்களில் சென்னையில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்குகிறது. கடந்த 2015ம் ஆண்டு ஒரே நாளில் பெய்த அதிக கன மழையால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அதிக அளவில் உபரிநீர் திறந்துவிடப்பட்டது. மழைநீரும், ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட உபரிநீரும் சேர்ந்து சென்னையில் பல இடங்களில் வீடுகளை மூழ்கடித்தது. அதன் பிறகு கடந்த 2011ம் ஆண்டு பெய்த கனமழையாலும் சென்னை வெள்ளக் காடானது.

இந்நிலையில், தற்போது திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து சென்னையில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சென்னையில் ஆறுகளின் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டு அங்கிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அடுத்தகட்டமாக, சென்னையில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க என்னென்ன நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகிறார்கள்.

அதன் ஒரு பகுதியாக சென்னையில் வெள்ள பாதிப்பை தடுக்க திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள ஆறுகளை இணைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.  அதன்படி முதல்கட்டமாக கொசஸ்தலை ஆறு மற்றும் ஆரணி ஆறுகளை இணைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த 2 ஆறுகளையும் இணைக்கும் வகையில் விரைவில் ஆய்வு நடத்த நீர்வளத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

கொசஸ்தலை மற்றும் ஆரணி ஆறுகளை இணைப்பதற்கான தொழில்நுட்ப சாத்தியக்கூறுகளும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. வடசென்னை பகுதியில் கடல்நீர் முகத்துவாரத்தின் வழியே ஆறுகளில் புகுவதை தடுக்க இந்த நதிகள் இணைப்பு தேவைப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டம் வடமதுரை, தாமரை பாக்கம் சாலை அருகே கொசஸ்தலை ஆற்றில் தடுப்பணை உள்ளது. இங்கிருந்து உபரி நீரை வெளியேற்ற இணைப்பு கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது.

காரனோடை புதுவயல் சாலை அல்லது வெங்கல், பஞ்செட்டி அருகே உள்ள ஆறுகளை இணைக்கும் வகையில் கால்வாய் அமைக்க பரிந்துைரக்கப்பட்டு உள்ளது. இது நிலத்தடிநீரை அதிகரிக்கும். பஞ்செட்டி வரை கடல்நீர் கிட்டத்தட்ட 15 கி.மீ வரை உள்ளே புகுந்துள்ளது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் வறண்ட நிலையில் காணப்படுகிறது. ஆறுகளை இணைப்பதன் மூலம் 2030ம் ஆண்டுக்குள் கடல்நீர் உட்புகுவதை குறைக்க முடியும். ஆறுகள் இணையும் இடங்களில் இணைப்பு காய்வாயுடன் அணைகள் கட்டப்பட்டு வெள்ளப் பெருக்கை கட்டுப்பாட்டில் வைக்க முடியும். நிலத்தடி நீர் மட்டத்தையும் உயர்த்த முடியும், என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post சென்னையில் வெள்ள பாதிப்பை தடுக்க கொசஸ்தலை மற்றும் ஆரணி ஆறுகளை இணைக்க திட்டம்: நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Kosasthalai ,Arani ,Water Resources Department ,Chennai ,Koshasthalai ,
× RELATED அனைத்து நீர்த்தேக்கங்களிலும் இருப்பு...