×

போக்குவரத்து விதிமீறியதாக நிலுவையில் இருந்த 2 லட்சம் வழக்குகள் முடித்து வைப்பு: அபராதமாக ரூ.8.472 கோடி வசூல்

 

சென்னை, ஜூன் 26: சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக நிலுவையில் இருந்த 2,06,646 வழக்குகளை போலீசார் முடித்து வைத்து அபராதமாக ரூ.8.72 கோடி வசூலித்துள்ளனர். சென்னையில் சாலை விபத்துகள் மற்றும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். குறிப்பாக, ஹெல்மெட் அணியாதது, எல்லை கோட்டை தாண்டுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டியது என பல்வேறு போக்குவரத்து விதிகளை மீறியதாக பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இதுபோன்ற வழக்குகளில், சம்மந்தப்பட்ட வாகன ஓட்டிகள் அபராத தொகையை உடனடியாக செலுத்தாமல், ரசீதை மட்டும் பெற்றுக்கொண்டு, நீதிமன்றத்தில் அபராதத்தை செலுத்துவதாக கூறிவிட்டு செல்கின்றனர். ஆனால், அதன்படி, அபராத தொகையை செலுத்தாமல் ஏராளமானோர் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதையடுத்து நிலுவையில் உள்ள வழக்குகளை 10 போக்குவரத்து கால் சென்டர்கள் மூலம் சம்மந்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு நினைவூட்டி, ஆன்லைன் மற்றும் சிறப்பு மையங்கள் மூலம் அபராத தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 22 மற்றும் 24ம் தேதிகளில் சென்னை முழுவதும் வாகன சோதனை நடத்தப்பட்டது.

அப்போது, மது அருந்தி வாகனம் ஓட்டியதாக 85 வழக்குகளும், போக்குவரத்து விதிகளை மீறியதாக 6,663 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு, அபராதமாக 30 லட்சத்து 85 ஆயிரத்து 900 ரூபாய் வசூலிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சென்னையில் பல்வேறு போக்குவரத்து விதிகளை மீறியதாக கடந்த 5 மாதங்களில் அபராதம் செலுத்தாமல் நிலுவையில் இருந்த 2,06,646 வழக்குகளை சம்மந்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு 10 போக்குவரத்து கால் சென்டர்கள் மூலம் நினைவூட்டி, வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது. அதன்படி சம்மந்தப்பட்ட வாகன ஓட்டிகளிடம் அபராதமாக 8 கோடியே 72 லட்சத்து 83 ஆயிரத்து 700 ரூபாயை போலீசார் சார்பில் வசூலித்துள்ளனர்.

* போதையில் வாகனம் ஓட்டியதாக ரூ.15.13 கோடி அபராதம் வசூல்
சென்னையை விபத்து இல்லா மாநகரமாக்கும் வகையில் மாநகர காவல்துறை சார்பில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அதன்படி, சென்னையில் மது போதையில் வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாமல் ஏமாற்றி வந்த நபர்களிடம் அபராத தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, சென்னை முழுவதும் கடந்த 24ம் தேதி நடந்த சிறப்பு முகாமில் நிலுவையில் இருந்த 480 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு அபராதமாக 49 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டது. அந்த வகையில், சென்னை மாநகர காவல் எல்லையில் கடந்த 5 மாதங்களில் போதையில் வாகனம் ஓட்டிய 14,638 பேரிடம் அபராதமாக 15 கோடியை 13 லட்சத்து 66 ஆயிரத்து 600 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

The post போக்குவரத்து விதிமீறியதாக நிலுவையில் இருந்த 2 லட்சம் வழக்குகள் முடித்து வைப்பு: அபராதமாக ரூ.8.472 கோடி வசூல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?