×

இலங்கை பிரச்னையில் மோடி உதவி: அமைச்சர் விஜயதாசா ராஜபக்சே பேட்டி

நாக்பூர்: இலங்கையின் பொருளாதார நெருக்கடியின்போது பிரதமர் மோடி உதவி அளித்தார் என்று அந்நாட்டின் நீதித்துறை அமைச்சர் விஜயதாசா ராஜபக்சே புகழாரம் தெரிவித்தார். இலங்கையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அந்நாட்டு மக்கள் கடும் அவதிக்குள்ளாயினர். பொதுமக்களின் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து அப்போது அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே பதவி விலகினார். இதனை தொடர்ந்து புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார். பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருந்த நாட்டை மீட்க இலங்கைக்கு இந்தியா பல கோடி ரூபாய் கடனுதவி எரிபொருள், உணவுப்பொருள் என பல உதவிகளை அளித்தது.

இந்நிலையில் நாக்பூரில் நடந்த சர்வ சமய அமைதி மாநாட்டில், கலந்து கொள்ள வந்த இலங்கை அமைச்சர் விஜயதாசா ராஜபக்சே நிருபர்களிடம் கூறுகையில்,‘‘ இலங்கையில் நடந்த 30 ஆண்டு உள்நாட்டு போரினால் 60,000 பேர் பலியாயினர். இந்த பிரச்னை குறித்து ஆராய உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையம் விரைவில் அமைக்கப்படும். இதற்கு நிரந்தர தீர்வு காண தமிழர்கள் மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்களுடன் இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு அளித்து வரும் ஆதரவால் பெரும்பாலான பிரச்னைகள் தீர்க்கப்பட்டுள்ளன.எனவே விரைவில் இலங்கையில் அமைதி திரும்பும்’’ என்றார்.

The post இலங்கை பிரச்னையில் மோடி உதவி: அமைச்சர் விஜயதாசா ராஜபக்சே பேட்டி appeared first on Dinakaran.

Tags : Modi ,Sri Lanka ,Minister ,Vijayadasa Rajapakse ,Nagpur ,Justice Minister ,Vijaydasa Rajapakse ,
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...