×

காங்கிரசுடன் ரகசிய உறவு என குற்றச்சாட்டு பாஜ தலைமைக்கு துரோகம் செய்யமாட்டேன்: முன்னாள் முதல்வர் பொம்மை பேட்டி

பெங்களூரு: நான் காங்கிரஸ் கட்சியுடன் சமரச அரசியல் செய்வதாக சில பாஜ தலைவர்கள் கூறுவது உண்மை இல்லை என்று முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார். கர்நாடக சட்டப்பேரவைக்கு நடந்து முடிந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் தோல்விக்கு சொந்த கட்சியைச் சேர்ந்த சில தலைவர்கள் காங்கிரஸ் கட்சியுடன் சமரச அரசியல் செய்து கொண்டது காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விஷயத்தில் மைசூரு தொகுதி மக்களவைத் உறுப்பினர் பிரதாப் சிம்ஹா, நேரடியாக பசவராஜ் பொம்மை மீது குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பெங்களூருவில் பசவராஜ் பொம்மையை துணை முதல்வர் டி. கே. சிவகுமார் சந்தித்து பேசினார். இது மேலும் கோபத்தை பாஜ தலைவர்களுக்கு ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து பசவராஜ் பொம்மை செய்தியாளர்களிடம் கூறியதாவது, ‘நான் எந்த அரசியல் கட்சி தலைவர்களுடன் சமரச அரசியல் செய்யவில்லை. அது அவசியம் இல்லை. அரசியலில் கொள்கை அடிப்படையில் மாறுபாடு இருந்தாலும் பிற கட்சி தலைவர்களுடன் நட்புறவு இருப்பது அவசியம். அரசியல் வேறு, நட்பு வேறு. எதிர்கட்சி தலைவர்களை எதிரிகளாக பார்க்க முடியுமா?

சில தினங்களுக்கு முன் மாநிலத்தில் மூத்த தலைவரும் எனது உறவினருமான சாமனூர் சிவசங்கரப்பாவை அவரது வீட்டிற்கு சென்று உடல் நலம் விசாரித்தேன். அவர் காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார் என்பதால் சந்திக்காமல் தவிர்க்க முடியுமா? கடந்த இரு நாட்களுக்கு முன் துணை முதல்வர் டி. கே. சிவகுமார் எனது வீட்டிற்கு வந்து பேசினார். அவர் காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர் என்பதால் வீட்டிற்கு வர வேண்டாம் என்று சொல்ல முடியுமா? அப்படி கூறினால் அரசியல் நாகரீகமா? நான் எனது உயர் மூச்சாக நினைப்பது பாஜவை தான். பாஜ தலைமை எனக்கு தாய் போன்றது. அதில் இருக்கும் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் எனது சகோதர, சகோதரிகளாக பாவிக்கிறேன். நான் எந்த சூழ்நிலையிலும் பாஜ தலைமைக்கு துரோகம் செய்ய மாட்டேன். யாருடன் சமரச அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை’ என்றார்.

The post காங்கிரசுடன் ரகசிய உறவு என குற்றச்சாட்டு பாஜ தலைமைக்கு துரோகம் செய்யமாட்டேன்: முன்னாள் முதல்வர் பொம்மை பேட்டி appeared first on Dinakaran.

Tags : BJP ,Congress ,Former Chief Minister ,Boyam Petty ,Bengaluru ,Congress party ,Former ,Chief Minister ,Boyam ,Dinakaran ,
× RELATED சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மாலை மகரஜோதி தரிசனம்..!