×

மயிலாப்பூரில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் பரபரப்பு: லிப்டில் சிக்கிய துப்புரவு பணியாளர் உடல் இரண்டு துண்டாகி பலி: ஒரு மணி நேரம் போராடி உடலை கைப்பற்றிய தீயணைப்பு வீரர்கள்

சென்னை: மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில், லிப்டில் சிக்கி துப்புரவு பணியாளர் ஒருவர் உடல் இரண்டு துண்டாகி துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் தனியார் நட்சத்திர ஓட்டலில் ஜிம், பார் என அனைத்து வசதிகளும் உள்ளது. பிரபலமான ஓட்டல் என்பதால் அரசியல் பிரமுகர்கள் முதல் நடிகர்கள் வரை இங்கு தங்குவது வழக்கம். இந்த ஓட்டலில் துப்புரவு பணி, சமையல் என நூற்றுக்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். அந்த வகையில் பெரம்பூரை சேர்ந்த அபிஷேக்(27) என்பவர் சவேரா நட்சத்திர ஓட்டலில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார்.

வழக்கம் போல் நேற்று மதியம் ஓட்டலில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஓட்டலின் 7வது தளத்தில் இருந்து 8வது தளத்துக்கு செல்ல அபிஷேக் டிராலியை தள்ளியபடி லிப்டில் ஏறினார். லிப்ட் மூடும் நிலையில் அவசரமாக அபிஷேக் ஏறியதாக கூறப்படுகிறது. அப்போது லிப்ட் சென்சார் சரியாக வேலை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அபிஷேக் ஏற முயன்ற போது, லிப்டின் கதவு திறந்தது. அதேசமயம் லிப்ட் 8வது மாடிக்கு சென்றது. இதனால் அபிஷேக்கின் பாதி உடல் லிப்டிலும், மீதி பாதி உடல் பகுதி வெளியேயும் சிக்கிக்கொண்டது. இந்நிலையில் வழக்கமாக நல்ல நிலையில் இயங்கும் லிப்ட் என்றால் நின்று இருக்கும்.

ஆனால், லிப்ட் சரியாக பராமரிக்காத காரணத்தால், திடீரென அது 8வது தளத்துக்கு சென்று நின்றது. இதில் அபிஷேக் உடல் இரண்டாக துண்டானது. தலை முதல் வயிறு வரை உள்ள பகுதி லிப்ட் உள்ளே மாட்டிக் கொண்டது. இடுப்பு முதல் கால் வரை உள்ள பகுதி லிப்ட்டின் அடியில் மாட்டி இரண்டு துண்டானது. இதனால், அபிஷேக் சம்பவ இடத்தலேயே இறந்தார். வெகு நேரமாக லிப்ட் கீழே இறங்காததால் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் சென்று பார்த்தபோது தான், அபிஷேக் இறந்து கிடந்தது தெரியவந்தது. இந்த காட்சிகளை பார்த்து ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே இதுகுறித்து ஓட்டல் நிர்வாகம் சார்பில் ராயப்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதன்படி விரைந்து சென்ற போலீசார் பார்த்தபோது, 7 மற்றும் 8வது தளத்துக்கு இடையே அபிஷேக் சிக்கி இருந்ததால் அவரை மீட்க முடியவில்லை. உடனே போலீசார் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். அதன்படி எழும்பூர் மற்றும் திருவல்லிக்கேணி பகுதியில் இருந்து விரைந்து வந்த 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி இயந்திரங்கள் உதவியுடன் லிப்டை வெட்டி எடுத்து அபிஷேக் உடலை மீட்டனர். பின்னர் அபிஷேக் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், லிப்ட் முறையாக பராமரிக்கப்படாமல் இருந்ததால் இந்த விபத்து நடந்ததாக விசாரணையில் தெரியவந்தது. எனினும் சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதைதொடர்ந்து ஓட்டல் மேலாளர், லிப்ட் பராமரிப்பாளர் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நட்சத்திர ஓட்டல் ஒன்றில் துப்புரவு பணியாளர் லிப்டில் சிக்கி உடல் இரண்டு துண்டாகி இறந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

* 3 பேர் மீது வழக்குப்பதிவு
லிப்ட்டில் வாலிபர் உயிரிழந்த விவகாரத்தில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. லிப்ட் இன்சார்ஜ் கோகுல் (39), தலைமை பொறியாளர் வினோத்குமார் (38) மற்றும் ஹோட்டல் மேலாளர் குமார் (54) ஆகிய மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post மயிலாப்பூரில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் பரபரப்பு: லிப்டில் சிக்கிய துப்புரவு பணியாளர் உடல் இரண்டு துண்டாகி பலி: ஒரு மணி நேரம் போராடி உடலை கைப்பற்றிய தீயணைப்பு வீரர்கள் appeared first on Dinakaran.

Tags : Pandemonium ,Mylapore ,Chennai ,Dr. Radhakrishnan Road, Mylapur ,
× RELATED ரூ.1.5 கோடி வழிப்பறி: 9 பேர் கைது