×

சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் 25வது வந்தே பாரத் ரயில் பெட்டி தயாரிப்பு: அதிகாரி தகவல்

சென்னை: சென்னை தொழிற்சாலையில், ‘வந்தே பாரத் விரைவு ரயிலின் 25வது ரயில் பெட்டி உருவாக்கப்பட்டு’ உள்ளது என ஐசிஎப் உயரதிகாரி தெரிவித்துள்ளார். சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் பல்வேறு வகைகளில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவின் ஆராய்ச்சி வடிவமைப்புகள் மற்றும் தரநிலைகள் அமைப்பினால் வடிவாக்கம் செய்யப்பட்டு சென்னை ஐசிஎப் நிறுவனத்தால் கட்டமைக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள், இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக செயல்பட்டு வருகிறது. அதன்படி அதிநவீன வந்தே பாரத் ரயில் தயாரிப்பில் ஐசிஎப் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

மேலும் பல்வேறு முக்கிய நகரங்கள் இடையே இயக்கப்பட்டு வரும் 18 வந்தே பாரத் ரயில்களும் இங்கு தயாரிக்கப்பட்டவைதான். இதில், தெற்கு ரயில்வேயில் மட்டும் சென்னை – மைசூரு, சென்னை – கோவை, திருவனந்தபுரம் – காசர்கோடு ஆகிய 3 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை ஐசிஎப்பில் 2023-24ம் நிதியாண்டில் 736 வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட உள்ளன. தலா 16 பெட்டிகள் கொண்ட 46 ரயில்கள் அல்லது தலா 8 பெட்டிகள் கொண்ட 92 ரயில்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

இந்நிலையில், சென்னை ஐசிஎப்பில் 25வது வந்தே பாரத் விரைவு ரயில் பெட்டி உருவாக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து ஐ.சி.எப். அதிகாரி கூறியதாவது: அதிநவீன ரயில் பெட்டி அனைத்து மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. அதன்படி 25வது வந்தே பாரத் ரயில் பெட்டியை உருவாக்கப்பட்டுள்ளது. இதை பகிர்ந்துகொள்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த ரயில் போபாலுக்குச் செல்ல உள்ளது. இந்த மைல் கல்லை எட்டியதற்காக ஊழியர்களுக்கு பாராட்டுக்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் 25வது வந்தே பாரத் ரயில் பெட்டி தயாரிப்பு: அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Tags : Vande Bharat ,Chennai ,ICF ,Vande Bharat Express ,Dinakaran ,
× RELATED சென்னை-திருப்பதி இடையே வந்தே மெட்ரோ ரயில்: 2 மாதங்களில் சோதனை