×

ரூ.25 லட்சம் மோசடி கோவையை சேர்ந்த கான்டிராக்டர் கைது

சென்னை: ரூ.25 லட்சம் பெற்றுக்கொண்டு கால்பந்தாட்ட மைதானத்தில் புல்வெளி அமைக்காமல் ஏமாற்றி வந்த ஒப்பந்ததாரரை திருவிக நகர் போலீசார் கைது செய்தனர். சென்னை பெரம்பூர் கண்ணபிரான் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (30). இவர் சென்னை மாநகராட்சியில் ஒப்பந்ததாரராக இருந்து வருகிறார். இவர் சென்னை திருவிக நகர் பல்லவன் சாலையில் கால் பந்தாட்ட மைதானம் அமைக்கும் பணியினை மேற்கொண்டு வருகிறார். அந்த மைதானத்தில் புல்வெளி அமைக்கும் பணிக்காக கோயம்புத்தூர் மாவட்டம் கோவை புதூர் பகுதியைச் சேர்ந்த விஷ்ணு (30) என்ற நபருக்கு 2 தவணைகளாக ரூ.25 லட்சம் பணம் கொடுத்து பணிகளை மேற்கொள்ள கூறியுள்ளார்.

பணத்தை வாங்கிக் கொண்டு நீண்ட நாட்களாக விஷ்ணு பணிகளை தொடங்கவில்லை. இதுகுறித்து அவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோதும் அவர் சரியான பதில் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனையடுத்து விஷ்ணு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி திருவிக நகர் காவல் நிலையத்தில் ஜெயக்குமார் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த திருவிக நகர் குற்ற பிரிவு போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி நேற்று விஷ்ணுவை கைது செய்தனர். விஷ்ணு மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post ரூ.25 லட்சம் மோசடி கோவையை சேர்ந்த கான்டிராக்டர் கைது appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Chennai ,Thiruvik Nagar ,Dinakaran ,
× RELATED கோவை மருத்துவமனையில் தொழிலாளி...