×

சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்குக்கு சிலை: சமூக நீதி காவலருக்கு மரியாதை, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: சென்னை மாநில கல்லூரி வளாகத்தில், முன்னாள் பிரதமர் வி.பி.சிங் முழு உருவ சிலை நிறுவப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உத்திர பிரதேச மாநிலம், அலகாபாத் மாவட்டத்தில் ஜமீன்தாராக இருந்த ராஜா தயா பகவதி பிரதாப் சிங்கிற்கு மகனாக பிறந்த விஸ்வநாத் பிரதாப் சிங், செல்வ சூழ்நிலையில் வளர்ந்தாலும், அதில் மனம் ஒட்டாமல் சட்டக் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே காந்திய இயக்கத்தில் ஈடுபட்டவர். மேலும், சர்வோதய சமாஜ் இயக்கத்தில் இணைந்து பூமிதான இயக்கத்தில் பங்கெடுத்து தனது நிலங்களையே தானமாக வழங்கியவர்.

இதன் பின்னர், உத்தரப் பிரதேச மாநில முதல்வராகவும், ஒன்றிய வர்த்தக அமைச்சராகவும், வெளியுறவுத் துறை அமைச்சர், நிதி அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆகிய உயர் பொறுப்புகளை வகித்தவர் வி.பி.சிங். பின்னர் தேசிய முன்னணி என்ற கூட்டணியை உருவாக்கி, 1989ம் ஆண்டு இந்தியாவின் பிரதமரானார். வி.பி.சிங் பிரதமராக இருந்தது 11 மாதங்கள் தான் என்றாலும், அதற்குள் அவர் செய்த சாதனைகள் மகத்தானவை. இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது பட்டியலின, பழங்குடியினருக்கு ஒன்றிய அரசுப் பணியிடங்களில் தனி இடஒதுக்கீடு தரப்பட்டது. ஆனால், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு தரப்படவில்லை.

இதனை வழங்குவதற்காக பி.பி. மண்டல் தலைமையில் அமைக்கப்பட்ட 2வது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் சமூக ரீதியாகவும், கல்வியிலும் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று அழைக்கப்படும் சமூகத்திற்கு அரசுப் பணியிடங்களில் 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற பரிந்துரையை அமல்படுத்திய சமூக நீதிக் காவலர் தான் வி.பி.சிங். அதேபோல, தமிழ்நாட்டை தனது ரத்த சொந்தங்கள் வாழும் மாநிலமாக நினைத்த அவர் தந்தை பெரியாரை தனது உயிரினும் மேலான தலைவராக ஏற்றுக் கொண்டார். மேலும், கலைஞரை தனது சொந்த சகோதரர் போல் மதித்தவர்.

தனது ஆட்சியைப் பற்றிக்கூட பொருட்படுத்தாமல், ஒரு கொள்கைக்காக, லட்சியத்துக்காக என்னோடு இருந்த மாபெரும் தலைவர் கலைஞர் என்று பாராட்டியவர் வி.பி.சிங். அத்தகைய சமூக நீதிக் காவலருக்கு ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் 20ம் தேதி சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் அறிவித்த அறிவிப்பின்படி, சென்னை, மாநிலக் கல்லூரி முன்னாள் மாணவர் பேரவை மற்றும் பேராசிரியர் பெருமக்கள் ஆகியோரது வேண்டுகோளை ஏற்று, அரசு அதனை பரிசீலித்து “சமூக நீதிக் காவலர்” வி.பி.சிங்கிற்கு, சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் முழு உருவ கம்பீர சிலை அமைத்திட தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்குக்கு சிலை: சமூக நீதி காவலருக்கு மரியாதை, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Singh ,Social Justice Guard ,CM ,G.K. Stalin ,Chennai ,Chennai State College ,V.R. GP Singh ,Tamil Nadu ,Chennai State College Campus ,V.P. GP ,CM G.K. Stalin ,Dinakaran ,
× RELATED அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான...