×

அதிபர் அல்சிசியுடன் 3 புரிந்துணர்வு ஒப்பந்தம் பிரதமர் மோடிக்கு எகிப்து நாட்டின் உயரிய விருது: வெளிநாட்டு பயணத்தை முடித்து கொண்டு டெல்லிக்கு புறப்பட்டார்

கெய்ரோ: எகிப்து நாட்டிற்கு முதல் முறையாக சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய ‘ஆர்டர் ஆப் தி நைல்’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அமெரிக்கா, எகிப்து பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி டெல்லிக்கு புறப்பட்டார். அமெரிக்காவில் முதல் முறையாக அரசு முறை பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, 3 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, அங்கிருந்து நேற்று முன்தினம் 2 நாள் பயணமாக எகிப்து நாட்டிற்கு சென்றார். எகிப்து நாட்டிற்கு பிரதமர் மோடி மேற்கொள்ளும் முதல் அரசு முறை பயணம் இது. தலைநகர் கெய்ரோவில் எகிப்து பிரதமர் முஸ்தபா மத்தவுலி நேரில் வந்து வரவேற்றார். அதை தொடர்ந்து இந்திய வம்சாவளியினரை பிரதமர் மோடி சந்தித்தார்.

பயணத்தின் 2வது நாளான நேற்று கெய்ரோவில் அமைந்து இருக்கும் 11ம் நூற்றாண்டை சேர்ந்த மிகவும் பழமைவாய்ந்த அல் ஹகீம் மசூதிக்கு பிரதமர் மோடி நேரில் சென்று பார்வையிட்டார். அதை தொடர்ந்து, மசூதியை சீரமைத்த இந்தியாவை சேர்ந்த போரா பிரிவு மக்களிடமும் அவர் கலந்துரையாடினார். பின்னர், முதலாம் உலகப் போரின்போது எகிப்து நாட்டிற்காக போரிட்டு உயிர் தியாகம் செய்த 4,300 இந்திய வீரர்களுக்காக கட்டப்பட்ட ஹீலியோபோலிஸ் என்ற போர் கல்லறைக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இதைத் தொடர்ந்து எகிப்து நாட்டின் அதிபர் அப்தேல் பத்தா அல் சிசியை பிரதமர் மோடி நேரில் சந்தித்து பேசினார்.

அப்போது வர்த்தகம், முதலீடுகள், எரிசக்தி உறவுகள் மற்றும் மக்களிடையேயான தொடர்புகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். மேலும், விவசாயம், தொல்லியல் மற்றும் கம்பெனி சட்டம் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கு இடையே 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஒப்பந்தங்களில் மோடி, அல்சிசி கையெழுத்திட்டு பகிர்ந்து கொண்டனர். பின்னர், அதிபர் அல்சிசி, எகிப்தில் உயரிய அரசு விருதான ‘ஆர்டர் ஆப் தி நைல்’ விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவித்தார்.

மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, சவுதி முன்னாள் மன்னர் சவுத் பின் அப்துல் அஜீஸ், ஜப்பான் மன்னர் அகிஹிடோ, முன்னாள் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்டர், இத்தாலி முன்னாள் பிரதமர் அமிண்டோர் பன்பாய், ஜோர்டான் மன்னர் ஹுசைன், வங்கதேச முன்னாள் அதிபர் ஜியாவுர் ரஹ்மான் உள்ளிட்டோர் இந்த விருதை பெற்றுள்ளனர். அந்த வரிசையில் இந்த விருதை பெரும் முதல் இந்தியர் என்ற பெருமையை மோடி பெற்று உள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டரில், ‘நைல் நதியின் ஆணையை நான் மிகுந்த பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன். இந்த கவுரவத்திற்காக எகிப்து அரசுக்கும் மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது அவர்கள் இந்தியா மற்றும் நம் தேச மக்கள் மீது வைத்திருக்கும் அரவணைப்பையும் பாசத்தையும் குறிக்கிறது’ என்று மோடி ஆங்கிலம் மற்றும் அரபு மொழிகளில் டிவிட் செய்தார். தொடர்ந்து, 5 நாள் வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி நேற்றிரவு கெய்ரோவிலிருந்து டெல்லிக்கு புறப்பட்டார்.

* 13வது அரசு விருது
‘ஆர்டர் ஆப் தி நைல்’ பிரதமர் மோடிக்கு வழங்கப்படும் 13வது உயரிய அரசு விருதாகும். கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் மோடி, இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பாலஸ்தீனம், சவுதி அரேபியா, பப்புவா நியூ கினியா, பிஜி, பலாவ் குடியரசு, பூடான், பஹ்ரைன், மாலத்தீவு ஆகிய நாடுகளின் உயரிய அரசு விருதினை பெற்றுள்ளார். தற்போது எகிப்து அரசு வழங்கிய ‘ஆர்டர் ஆப் தி நைல்’ விருது, கடந்த 1915ம் ஆண்டு எகிப்தில் மன்னராட்சி இருந்தபோது சுல்தான் ஹுசைன் கமிலால் அறிமுகம் செய்யப்பட்டது. நாட்டுக்கு உயரிய சேவைகளை செய்தவர்களுக்காக அப்போதைய மன்னர்களால் வழங்கப்பட்டு வந்த இந்த விருது, 1953ல் எகிப்து குடியரசு நாடாக அறிவிக்கப்பட்ட பிறகு நாட்டின் உயரிய விருதாக வழங்கப்பட்டு வருகிறது.

The post அதிபர் அல்சிசியுடன் 3 புரிந்துணர்வு ஒப்பந்தம் பிரதமர் மோடிக்கு எகிப்து நாட்டின் உயரிய விருது: வெளிநாட்டு பயணத்தை முடித்து கொண்டு டெல்லிக்கு புறப்பட்டார் appeared first on Dinakaran.

Tags : President Al-Sisi ,Modi ,Egypt ,Delhi ,Cairo ,Prime Minister Modi ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…