×

பெலாரஸ் அதிபர் தலையீட்டால் உடன்பாடு ரஷ்ய ராணுவ கிளர்ச்சி முடிவுக்கு வந்தது: கூலிப்படை முகாம் திரும்பியது, எந்த வழக்கும் பாயாது என ரஷ்யா அறிவிப்பு

மாஸ்கோ: பெலாரஸ் நாட்டின் அதிபர் அலெக்சாண்டர் லூகாஷென்கோ நடத்திய சமாதானப் பேச்சுவார்த்தையை அடுத்து ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளினுக்கும், கூலிப்படை தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜினுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, ரஷ்யாவில் ராணுவ கிளர்ச்சி முடிவுக்கு வந்தது. கூலிப்படையினர் மீதான வழக்குகள் கைவிடப்படும் என்றும், புதிய வழக்குகள் தொடரப்படாது என்றும் கிரெம்ளின் உறுதி அளித்துள்ளது. உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக போரிட அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் ‘வாக்னர்’ என்ற தனியார் ராணுவத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ராணுவ கூலிப்படையின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர். இவரது வாக்னர் படை, உக்ரைனில் ஆக்ரோஷமாக போரிட்டு பாக்முத் உள்ளிட்ட நகரங்களை கைப்பற்றியதில் பெரும் பங்கு வகித்தது. இதற்கிடையே, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு மற்றும் பிரிகோஜின் இடையே மோதல் தீவிரமடைந்தது. ரஷ்ய ராணுவத்திற்கு கட்டுப்பட வேண்டிய ஒப்பந்தத்தில் ஜூலை 1ம் தேதிக்குள் கையெழுத்திட வேண்டுமென்ற பாதுகாப்பு துறையின் உத்தரவை பிரிகோஜின் புறக்கணித்தார். அதோடு, உக்ரைனில் இருந்து வாக்னர் படை வீரர்கள் திடீரென வெளியேறி, மாஸ்கோ நோக்கி அணிவகுத்தனர்.

ரஷ்யாவின் எல்லை நகரமான ரோஸ்டோவ் ஆன் டோனில் உள்ள ராணுவ தலைமையகத்தை பிரிகோஜின் கைப்பற்றியதாக நேற்று முன்தினம் வீடியோ வெளியிட்டார். மேலும் தேசிய நெடுஞ்சாலை வழியாக 3,000 வீரர்களுடன் பிரிகோஜின் படையினர் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ நோக்கி முன்னேறினர். இதனால் ரஷ்யாவில் உள்நாட்டு போர் மூளும் அபாயம் ஏற்பட்டது. பிரிகோஜின் படையினர் மாஸ்கோவில் நுழையாமல் தடுக்க நகர எல்லையில் ரஷ்ய ராணுவம் சோதனை முகாம்களை அமைத்தது. இயந்திர துப்பாக்கியுடன் வீரர்கள் நிறுத்தப்பட்டனர். தலைநகர் முழுவதும் பல கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டது. பிரிகோஜின் படையினர் வோரோனேஜ் நகரையும் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து மாஸ்கோவுக்கு 200 கிமீ தூரத்தில் நெருங்கினர்.

இந்த நிலையில், ‘ரஷ்யா ரத்தம் சிந்த விரும்பவில்லை’ எனக்கூறி பிரிகோஜின் தனது படையுடன் திரும்பிச் செல்வதாக நேற்று முன்தினம் இரவு அறிவித்தார். இதன் மூலம் ரஷ்யாவின் சுமார் 24 மணி நேரமாக நிலவி வந்த பதற்றம் முடிவுக்கு வந்தது. உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு உதவி வரும் பெலாரஸ் நாட்டின் அதிபர் அலெக்சாண்டர் லூகாஷென்கோ நடத்திய சமாதானப் பேச்சுவார்த்தையை தொடர்ந்து பிரிகோஜின் ராணுவ கிளர்ச்சியை கைவிட்டதாக கூறப்படுகிறது. ரஷ்ய அதிபர் புடினின் சம்மதத்துடன் நடந்த இந்த சமாதானப் பேச்சுவார்த்தையில், பிரிகோஜின் பெலாரசுக்கு சென்று தங்க அனுமதிப்பதாகவும், அவர் மீதான கிரிமினல் வழக்குகளை முடித்துக் கொள்ளவும் ரஷ்ய அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

மேலும், பிரிகோஜின் தண்டிக்கப்பட மாட்டார் என்றும், இனியும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வாக்னர் படைக்கு எந்த ஒப்பந்தத்தையும் வழங்காது என்றும் உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது. ராணுவ கிளர்ச்சி தொடர்பாக வாக்னர் படையினர் மீது எந்த வழக்கும் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படாது என்றும் ரஷ்ய அதிபர் மாளிகை கிரெம்ளின் உறுதி அளித்துள்ளது. இதன் பிறகே வாக்னர் படையினர் முகாம் திரும்பி உள்ளனர். இதன் மூலம் ரஷ்யாவின் ராணுவ கிளர்ச்சி முடிவுக்கு வந்துள்ளது. வாக்னர் படையினர் மீண்டும் உக்ரைனின் யுத்த களத்திற்கு திரும்ப பிரிகோஜின் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் மாஸ்கோ மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

ஆனாலும் இந்த விவகாரம் 20 ஆண்டாக ஆட்சியில் இருக்கும் ரஷ்ய அதிபர் விளாடிமின் புடினின் அதிகாரம் குறித்து கேள்விக்குறியை ஏற்படுத்தியது. அவரது மதிப்பு எந்த காலத்திலும் இல்லாத அளவுக்கு குறைந்து விட்டதாக அமெரிக்க ஆய்வாளர்கள் கூறி உள்ளனர். தேச துரோகி, முதுகில் குத்திவிட்டார் என பிரிகோஜின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்திய புடின், அதன் பின் சமாதானம் பேசி இருப்பதால் அவர் நிஜமாகவே பலவீனமாகி விட்டாரா, மாஸ்கோவை காப்பாற்றிக் கொள்ள பதறும் அளவுக்கு ரஷ்ய ராணுவம் தரம் தாழ்ந்து விட்டதா, 8 லட்சம் வீரர்களை கொண்ட ரஷ்ய ராணுவத்தால் வாக்னர் படையை தடுத்து நிறுத்தும் திறன் கூட இல்லையா என பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.

மாஸ்கோ நோக்கிய அணிவகுப்பை தடுப்பதற்காக ரஷ்ய ராணுவம் அனுப்பிய பல ஹெலிகாப்டர்கள் மற்றும் ஒரு தகவல் தொடர்பு போர் விமானத்தை வாக்னர் படையினர் சுட்டு வீழ்த்தி உள்ளனர். இந்த ராணுவ கிளர்ச்சி மூலம் ரஷ்ய அதிபர் புடின் மற்றும் அந்நாட்டு ராணுவம் பலவீனமாக உள்ளது என்பதை பிரிகோஜின் வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருப்பதாக உக்ரைன் உள்ளிட்ட நாடுகள் கருத்து தெரிவித்து வருகின்றன.

* சண்டைக்காரர்… சமையல்காரர்..
வாக்னர் தனியார் ராணுவ கூலிப்படையின் 62 வயதாகும் தலைவர் பிரிகோஜின், ஓட்டல் தொழில் செய்து வந்தவர். ரஷ்ய அதிபர் புடினுடன் பழக்கம் ஏற்பட்டதும், அதிபர் மாளிகைக்கு உணவு சப்ளை செய்யும் ஒப்பந்தத்தை பெற்றார். இதன் மூலம் புடினின் சமையல்காரர் என அழைக்கப்பட்டார். இவர் இடையேயான உறவு வலுவடைந்ததும், 2014ல் வாக்னர் எனும் தனியார் ராணுவ ஒப்பந்த நிறுவனத்தை பிரிகோஜின் தொடங்கினார். அவரது இந்த ராணுவ கூலிப்படை ஒப்பந்தத்தின் அடிப்படையில் சிரியா, லிபியா, மற்றும் பல ஆப்ரிக்க நாடுகளில் அரசு படைக்கு ஆதரவாக உள்நாட்டு போரில் சண்டையிட்டு வருகிறது. உக்ரைன் போரிலும் ரஷ்ய ராணுவத்துடனான ஒப்பந்தத்தின் அடிப்படையில் வாக்னர் படை சண்டையிட்டு வருகிறது. இப்படையில் சுமார் 25,000 வீரர்கள் உள்ளனர்.

* வாழ்த்தி வழியனுப்பிய மக்கள்
மாஸ்கோ நோக்கிய கிளர்ச்சியை நிறுத்துவதாக அறிவித்த பின்னர் வாக்னர் கூலிப்படையின் தலைவர் பிரிகோஜின் மற்றும் படை வீரர்கள் ரோஸ்டோவ் நகரில் இருந்து ராணுவ வாகனங்களில் ஏறி புறப்பட்டனர். அப்போது சாலைகளில் குவிந்த மக்கள் அவர்களை வாழ்த்தி வழி அனுப்பினர். பலரும் பிரிகோஜினுடன் செல்பீ எடுத்து மகிழ்ந்தனர். அவருக்கு கைக் குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். ‘ரஷ்யா விரைவில் புதிய அதிபரை தேர்வு செய்யும்’ என பிரிகோஜின் நேற்று முன்தினம் தனது வீடியோவில் கூறியிருந்த நிலையில், அவருக்கான மக்கள் ஆதரவு பெருகி உள்ளது.

The post பெலாரஸ் அதிபர் தலையீட்டால் உடன்பாடு ரஷ்ய ராணுவ கிளர்ச்சி முடிவுக்கு வந்தது: கூலிப்படை முகாம் திரும்பியது, எந்த வழக்கும் பாயாது என ரஷ்யா அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : President of Belarus ,Russia ,Moscow ,Kremlin ,Russian Chancellor's House ,President ,Alexander Lukashenko ,Belarus ,Dinakaran ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...