×

ஆஸ்கர் விருதுக்கான விதிகளில் திருத்தம்: புதிய விதிகளுக்கு கிளம்பியது எதிர்ப்பு

வாஷிங்டன்: உலகளவிலான திரைத் துறையின் உயரிய விருதாக ஆஸ்கர் கருதப்படுகிறது. ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சிறந்த திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்குரிய தகுதிப்பாடு விதிகள் மாற்றப்பட்டுள்ளன. அமெரிக்காவின் நியூயார்க், லாஸ் ஏஞ்சலீஸ், சிகாகோ, அட்லான்டா, சான் பிரான்சிஸ்கோ, மியாமி ஆகிய 6 நகரங்களில் ஏதாவதொன்றில் அமைந்துள்ள திரையரங்கில் ஒரு வாரத்துக்குத் திரையிடப்பட்ட திரைப்படங்கள், சிறந்த திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது போட்டிக்குத் தகுதிபெறும். அந்த விதி தற்போது மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி, மேற்கண்ட விதியுடன் சேர்த்து அமெரிக்காவின் தலைசிறந்த 50 திரைச்சந்தை நகரங்களில் குறைந்தபட்சம் 10 நகரங்களில் உள்ள திரையரங்கில் ஒரு வாரத்துக்குத் திரைப்படம் திரையிடப்பட்டிருக்க வேண்டும் என்று ஆஸ்கர் அகாடமி தெரிவித்துள்ளது. மேலும், திரைப்படங்கள் எந்த நேரத்தில் திரையரங்கில் திரையிடப்பட வேண்டும் என்பதற்கான விதிகளிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புதிய விதிகள் 2025ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதில் இருந்து நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரைப்படங்களை அதிக எண்ணிக்கையிலான மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கிலும், மக்கள் திரையரங்கு சென்று படம் பார்க்க வேண்டும் என்ற நோக்கிலும் இந்தப் புதிய விதிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக அகாடமி தெரிவித்துள்ளது. மேற்கண்ட புதிய விதிகளுக்கு ஒருசாரார் வரவேற்பும் ஒருசாரார் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

The post ஆஸ்கர் விருதுக்கான விதிகளில் திருத்தம்: புதிய விதிகளுக்கு கிளம்பியது எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Oscars ,Washington ,Dinakaran ,
× RELATED இந்தியாவில் முதலீடு: வாரன் பஃபெட் விருப்பம்