×

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன தேரோட்டம் கோலாகலம்

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி திருமஞ்சன திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவம் கடந்த ஜூன் 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது. ஜூன் 23ம் தேதி தங்க கைலாச வாகன வீதிஉலாவும், ஜூன் 24-ம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதிஉலாவும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருவிழாவில் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.

பூலோக கைலாயம் எனப்படும் நடராஜர் கோயில் வருடத்தில் இரண்டு முறை திருவிழா சிறப்பாக நடைபெறும். இதில் மார்கழி மாதத்தில் வரக்கூடிய ஆருத்ரா தரிசன விழா மற்றும் ஆனி மாதத்தில் வரக்கூடிய ஆனி திருமஞ்சனத் திருவிழாவும் மிகவும் பிரசித்தி பெற்றவை. சிதம்பரம் நடராஜர் கோயிலில் திருவிழாவின் போது மூலவரான நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி அம்பாள் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். மற்ற கோயில்களில் உற்சவமூர்த்திகள் வீதி உலா வருவது வழக்கம் ஆனால் சிதம்பரத்தில் மட்டும் மூலவரான நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி அம்பாள் வெளியே வந்து வருடத்தில் இரண்டு முறை தேரில் வலம் வருவது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.

இன்று அதிகாலை நடராஜர் கோயிலில் சித்சபையில் வீற்றுள்ள நடராஜமூர்த்தி, சிவகாமசுந்தரி அம்பாள் சபையில் இருந்து இறங்கி கோயில் உள் பிரகாரம் மற்றும் வெளிப்பிரகாரத்தை வலம் வந்தனர். பின்னர் மேள வாத்தியம் முழங்க, ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய என்ற பக்தர்களின் கரகோஷத்துடன் கோயிலில் இருந்து வெளியே வந்த நடராஜர் சிவகாமசுந்தரி அம்பாள் கீழ சன்னதியில் அமைந்துள்ள தேரில் எழுந்தருளினார். அதனை தொடர்ந்து சிறப்பு பூஜை மற்றும் ஆராதனை காண்பிக்கப்பட்டு தேர் நிலையிலிருந்து புறப்பட்டது. தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர். அதேபோல் உற்சவ மூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய ஐவரும் தனித்தனி தேர்களில் வீதிவலம் வந்தனர். அலை கடலென திரண்டு இருந்த பக்ததர்கள் மத்தியில் விநாயகர், முருகர், நடராஜர், சிவகாமி அம்பாள், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட சாமிகள் நான்கு வீதிகளிலும் வலம் வந்தனர்.

இதில் தேர் வலம் வரும்போது சிவ பக்தர்களின் சிவ தாண்டவ நடனம், மற்றும் பெண்கள் சிறுவர் சிறுமியர் உள்ளிட்டவர்கள் பங்கேற்ற கோலாட்டம் கும்மியாட்டம் நடைபெற்றது. மேலும் செண்டை மேளம், பறையாட்டம் உள்ளிட்டவை நடைபெற்றது. இதில் சிறுவர்கள் செண்டை மேளம் அடிப்பதும், கோலாட்டத்தில் ஈடுபடுவதும் கண் கொள்ளா காட்சியாக இருந்தது. அதேபோல் சிவ பக்தர்கள் சிவ தாண்டவ நடனம் தேரின் முன் ஆடியவாறு வந்தனர். மேலும் ஓம் நமச்சிவாயா, ஓம் நமச்சிவாயா என்ற கரகோஷத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தவாறு சாமி தரிசனம் செய்தனர். இதில் உள்ளூர், வெளியூர், வெளி மாவட்டம், வெளி மாநிலம், வெளிநாட்டை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

இன்று இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏக கால லட்சார்ச்சனை நடைபெறுகிறது. ஜூன் 26ம் தேதி திங்கள்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 3 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூர்த்தி வீதிஉலா வந்த பின்பு பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது.ஜூன் 27-ம் தேதி பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் முடிவடைகிறது.

The post சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன தேரோட்டம் கோலாகலம் appeared first on Dinakaran.

Tags : Sidambaram Natarajar Temple ,Ani Thirumanjana ,Cherottam ,Temple ,Chidambaram ,Chitambaram Natarajar Temple ,Ani Tirumanjana Festival ,Natarajar Temple ,Ani Tirumanjana ,
× RELATED இந்து அறநிலைய துறையின் கீழ் நடராஜர் கோயிலை கொண்டு வரக்கோரி பேரணி