×

12 மணி நேரத்தில் முடிவுக்கு வந்தது உள்நாட்டு போர் பதற்றம்; ரஷ்ய அதிபரின் மிரட்டலுக்கு பணிந்தது ‘வாக்னர்’ கூலிப்படை: பெலாரஸ் அதிபரின் தலையீட்டால் முகாமுக்கு திரும்புகிறது

மாஸ்கோ: ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட வாக்னர் கூலிப்படை, ரஷ்ய அதிபரின் மிரட்டலுக்கு பணிந்தது. 12 மணி நேரத்தில் பிரச்னை முடிவுக்கு வந்தது. பெலாரஸ் அதிபரின் தலையீட்டால், வாக்னர் படைமுகாமுக்கு திரும்புகிறது. கடந்த ஓராண்டுக்கு மேலாக ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் நடைபெற்று வரும்நிலையில், ரஷ்ய பாதுகாப்பு படையினருடன் இணைந்து ‘வாக்னர்’ எனப்படும் தனியார் கூலிப்படை ராணுவ அமைப்பு உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வந்தது. ஆனால் இந்த குழு தற்போது ரஷ்யாவிற்கு எதிராக திரும்பி உள்ளது.

சமீபகாலமாக ரஷ்ய ராணுவ அதிகாரிகள், வாக்னர் குழுவினர் மீது தொடர்ந்து அடக்குமுறைகளை செயல்படுத்தி வருவதாக இந்த அமைப்பின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஸ் தெரிவித்திருந்தார். மேலும் உக்ரைனுக்கு எதிரான போரில் தங்களுக்கு போதிய ஆயுதங்களை வழங்கவில்லை என்றும், தங்களது வீரர்கள் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதற்கு ரஷ்ய ராணுவம் தான் காரணம் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வாக்னர் குழுவினர், ரஷ்யாவுக்கு எதிராக போரிட தயாராகி உள்ளனர். நேற்று ரஷ்யாவின் ரோஸ்டோவ்-ஆன்-டான் ராணுவ கட்டுப்பட்டு மையத்தை வாக்னர் குழு கைப்பற்றியதாக தகவல்கள் வெளியானது. இதனால் கோபமடைந்த ரஷ்யா, வாக்னர் குழுவிற்கு கடும் எச்சரிக்கையை விடுத்தது. மேலும், இந்த அமைப்பின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஸை கைது செய்யவும், கிளர்ச்சியாளர்களை கண்டதும் சுடவும் உத்தரவிட்டிருந்தது. தலைநகர் மாஸ்கோ உட்பட ரஷ்யா முழுவதும் ராணுவம் குவிக்கப்பட்டது.

இந்த சூழலில் வாக்னர் குழு, திடீரென ரஷ்யாவின் ரோஸ்டோவ்-ஆன்-டானிலிருந்து வீரர்களைத் திரும்பப் பெறத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்ய அதிபர் புடினின் நண்பரான பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ உடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், தனது படைகள் வெளியேறுவதாக வாக்னர் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஸின் தெரிவித்தார். இதுதொடர்பாக கிரெம்ளின் (ரஷ்ய அதிபர் மாளிகை) செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், ‘வாக்னர் தலைவர் பெலாரசுக்குச் செல்கிறார். அவர் மீதான வழக்குகள் கைவிடப்படும். வாக்னர் குழுவின் தற்போதைய எதிர்ப்பால், உக்ரைன் மீதான தாக்குதல் திட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படாது. வாக்னர் படை வீரர்களை ரஷ்யா தண்டிக்காது. அவர்களின் வீரச் செயல்களை மதிக்கிறோம்’ என்றார்.

இதுகுறித்து சர்வதேச விவகார நிபுணர்கள் கூறுகையில், ‘ரஷ்ய அதிபர் புடினின் மிரட்டலுக்கு வாக்னர் படைக் குழுவின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஸின் பணிந்துள்ளார். ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக கிளர்ச்சி நடத்திய 12 மணி நேரத்திற்குள், பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ உடனான ஒப்பந்தத்தால், வாக்னர் படைக் குழு அமைதியானது. அதனால் ரஷ்யா மீதான தாக்குதலை வாக்னர் குழு நிறுத்தியுள்ளது. உள்நாட்டு போர் அபாயம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. வாக்னர் கூலிப்படையினர் தங்களது முகாமிற்கு திரும்புகின்றனர். மாஸ்கோ நகருக்கு 200 கிலோமீட்டர் தொலைவில் முகாமிட்டிருந்த வாக்னர் குழு, தற்போது பின்வாங்கி சென்றுள்ளது. அவர்கள் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைன் முகாமிற்கு செல்வார்கள்’ என்று கூறினர்.

The post 12 மணி நேரத்தில் முடிவுக்கு வந்தது உள்நாட்டு போர் பதற்றம்; ரஷ்ய அதிபரின் மிரட்டலுக்கு பணிந்தது ‘வாக்னர்’ கூலிப்படை: பெலாரஸ் அதிபரின் தலையீட்டால் முகாமுக்கு திரும்புகிறது appeared first on Dinakaran.

Tags : Wagner ,Belarus ,Moscow ,Dinakaran ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...