×

போடி ரயில் நிலையத்திலிருந்து மூணாறுக்கு அரசு பஸ் தொடக்கம்: சுற்றுலாப்பயணிகள், வர்த்தகர்கள் மகிழ்ச்சி

போடி: சுற்றுலாப்பயணிகள் வசதிக்காக போடி ரயில் நிலையத்திலிருந்து மூணாறுக்கு அரசு பஸ் சேவை நேற்று தொடங்கப்பட்டுள்ளது. தமிழக – கேரள எல்லைப் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ளது தேனி மாவட்டம், போடி. இதையொட்டி உள்ள கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் ஏலம், காப்பி, மிளகு, தேயிலை ஆகிய பணப்பயிர்கள் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. கேரளாவில் உள்ள சுற்றுலாத்தலங்களை கண்டுகளிக்க வரும் உள்ளூர், வெளியூர் சுற்றுலாப்பயணிகள் போடி வழியாக சென்று வருகின்றனர். தெற்கு ரயில்வே சார்பில், மதுரையில் இருந்து தினசரி காலை, மாலை வேளைகளில் போடிக்கு ரயில் இயக்கப்படுகிறது. மேலும், வாரத்தில் 3 நாட்கள் சென்னையிலிருந்து அரக்கோணம், காட்பாடி, சேலம், கரூர், திண்டுக்கல் வழியாக போடிக்கு ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையிலிருந்து வரும் சுற்றுலாப்பயணிகளும், வடமாநிலத்தவர்களும் கேரளா செல்வதற்கு போடிக்கு வருவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

மேலும், போடியில் ஸ்பைசஸ் போர்டு மூலம் ஏலக்காய் விற்பனையும் நடந்து வருகிறது. எனவே, போடி ரயில் நிலையத்திலிருந்து, மூணாறுக்கு நேரடியாக அரசு பஸ் இயக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இக்கோரிக்கையை ஏற்று நேற்று காலை போடி ரயில் நிலையத்திலிருந்து, மூணாறுக்கு அரசு பஸ் சேவை தொடங்கப்பட்டது. போடி ரயில் நிலையத்தில் இறங்கும் சுற்றுலாப்பயணிகள், பொதுமக்கள் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள முக்கிய ஊர்களுக்குச் செல்ல, போடி நகரில் உள்ள பஸ் நிலையத்துக்கு செல்ல ஒரு கிமீ தூரம் வர வேண்டும். தற்போது பஸ் சேவை தொடங்கப்பட்டதால், மூணாறு செல்பவர்களின் அலைச்சல் குறையும். இதனால் சுற்றுலாப்பயணிகள், பொதுமக்கள், வர்த்தகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post போடி ரயில் நிலையத்திலிருந்து மூணாறுக்கு அரசு பஸ் தொடக்கம்: சுற்றுலாப்பயணிகள், வர்த்தகர்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Bodi Railway Station ,Moonur ,Bodi ,Government Bus Service ,Tamil Nadu ,Kerala ,Bodi Train Station ,Joy ,
× RELATED தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை: மனைவி கோபித்து சென்றதால் விரக்தி