×

₹5.80 கோடியில் தார்சாலை அமைக்கும் பணி தீவிரம் கலெக்டர், எம்எல்ஏ ஆய்வு முத்துக்குமரன் மலை அடிவாரத்திலிருந்து பீஞ்சமந்தை வரை

அணைக்கட்டு, ஜூன் 25: முத்துக்குமரன் மலை அடிவாரத்தில் இருந்து பீஞ்சமந்தை வரை ₹5.80 கோடியில் தார் சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை கலெக்டர், எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்டனர்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒன்றியத்தில் பீஞ்சமந்தை, பலாம்பட்டு, ஜார்தான்கொல்லை உள்ளிட்ட 3 மலை ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இவர்களின் பல ஆண்டுகால கோரிக்கையான அடிவாரத்திலிருந்து பீஞ்சமந்தை மலைக்கு வர தார்சாலை வசதி வேண்டும் என்பது நிறைவேறாமல் இருந்தது.

இந்த சாலை வசதி குறித்து தொகுதி எம்எல்ஏ நந்தகுமார் சட்டமன்றத்தில் பலமுறை பேசியதை தொடர்ந்து, தார் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சாலை அமைப்பதற்கான பணிகள் விரைவாக தொடங்குவது குறித்து எம்எல்ஏ, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உள்ளிட்டோர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். அதனைத் தொடர்ந்து பழங்குடியினர் நலத்துறை சார்பில் முத்துக்குமரன் மலை அடிவாரத்தில் இருந்து பீஞ்சமந்தை மலை வரை தார் சாலை அமைக்க ₹5.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்குவதற்கான அரசாணை வெளியானது. அதை தொடர்ந்து டெண்டர் விடப்பட்டு தார் சாலை அமைக்கும் பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது. இரண்டு கட்டமாக நடந்து வர கூடிய இந்த தாசாலை அமைக்கும் பணிகள் தற்போது பீஞ்சமந்தை மலைமேல் இருந்து பாதி தூரம் வரை 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு தார்சாலை அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. தொடர்ந்து, மீதமுள்ள இடங்களிலும், அடிவாரம் வரை சாலை அமைக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.

இந்தப் பணிகளை எம்எல்ஏ, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் உள்ளிட்டோர் அடிக்கடி ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மலையில் நடந்து வரும் இந்த தார்சாலை அமைக்கும் பணிகளை கலெக்டர் குமார்வேல்பாண்டியன், எம்எல்ஏ நந்தகுமார், திட்ட இயக்குனர் ஆர்த்தி, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் மு.பாபு, செயற்பொறியாளர் செந்தில்குமார், தாசில்தார் வேண்டா, பிடிஓ சுதாகரன் மற்றும் வனத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் ஆய்வு செய்தனர். தொடர்ந்து எதுவரை தார் சாலை அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது, இன்னும் எவ்வளவு பணிகள் முடிக்க வேண்டி உள்ளது என்பன உள்ளிட்டவைகளை கேட்டறிந்து சாலை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்து விரைவாக முடிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.

மலைவாழ் மக்களுக்காக அமைக்கக்கூடிய இந்த தார்சாலை பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க வேண்டும் என பணி ஒப்பந்ததாரர்கள் மற்றும் அலுவலர்களுக்கு கலெக்டர், எம்எல்ஏ உத்தரவிட்டனர். ஆய்வின் போது ஒன்றிய கவுன்சிலர்கள் கணபதி, பிரகாஷ் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், திமுகவினர் உடன் இருந்தனர். ஆய்வு குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘பீஞ்சமந்தை மலைக்கு தார்சாலை அமைக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. விரைவில் பணிகள் முழுமை பெற்று ஓரிரு மாதங்களில் தார் சாலை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்’ என்றனர். மலைக்கு செல்ல தார்சாலை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் விரைவில் முடிந்து பயன்பாட்டிற்கு வரும் என மலைவாழ் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

The post ₹5.80 கோடியில் தார்சாலை அமைக்கும் பணி தீவிரம் கலெக்டர், எம்எல்ஏ ஆய்வு முத்துக்குமரன் மலை அடிவாரத்திலிருந்து பீஞ்சமந்தை வரை appeared first on Dinakaran.

Tags : Dharsala ,MLA ,Muthukumaran ,Peenchamanthi ,Muthikumaran ,Dinakaran ,
× RELATED விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு...