×

தருவைகுளத்தில் சூறை மீன் வரத்து அதிகரிப்பு

குளத்தூர், ஜூன் 25: தருவைகுளத்தில் சூறை மீன் வரத்து அதிகரித்து காணப்பட்டது. சீலா மீன் ரூ.650க்கு விற்பனையானது. தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள தருவைகுளம் கடல் பகுதியில் பரவலாக மீன்பாடுகள் வரத்து காணப்பட்டது. கடந்த 2 மாதங்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்த விசைப்படகு மீனவர்கள், கடந்த வாரம் தடைக்காலம் முடிந்து மீண்டும் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். 3 மற்றும் 5, 7 நாட்கள் தங்கு கடல் தொழிலுக்கு சென்ற மீனவர்கள் வலையில் எலிச்சூறை, வரிச்சூறை, காக்கை சூறை, கேறை, சீலா, மயில், திருக்கை, விலமீன், வாலமுறல், பச்சைகளிங்கன் முறல், கருப்பு களிங்கன் முறல், ஊளி போன்ற மீன்கள் வரத்து இருந்தது. சூறை வகை மீன்கள் வரத்து அதிகமாக காணப்பட்டது.

எலிச்சூறை கிலோ ரூ.60க்கும் வரிச்சூறை ரூ,120க்கும், வாலமுறல் ரூ.200க்கும் ஏலம் போனது. பச்சைகளிங்கன் முறல் மற்றும் கருப்பு களிங்கன் முறல் ரூ.300 முதல் ரூ.400 வரை விற்பனையானது. குறைந்த வரத்து காரணமாக சீலா ரூ.650க்கும், ஊளி ரூ.300க்கும், விலமீன் ரூ.250க்கும் ஏலம் போனது. இதுகுறித்து மீன் வியாபாரிகள் கூறியதாவது: கடந்த இரு மாதமாக தடைக்காலம் என்பதால் விசைப்படகுகள் கடலுக்குள் தொழிலுக்கு செல்லாமல் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கடந்த வாரம் தடைக்காலம் முடிந்து தங்கு கடல் தொழிலுக்கு சென்ற விசைப்படகுகள் ஒவ்வொன்றாக கரை திரும்பி வருகின்றன. இதில் ஓரளவு பரவலாக மீன்பாடு வரத்துள்ளது. கேறை மற்றும் சூறை மீன்கள் வரத்து கொஞ்சம் அதிகரித்துள்ளது. கடலில் காற்று மந்தமாக இருந்ததால் மீன்பிடித் தொழிலுக்கு சென்ற மீனவர்கள் எதிர்பார்த்த மீன்பாடுகள் வரத்து கம்மிதான். வரும் நாட்களில் கடல் பகுதியில் காற்றின் மாற்றத்தை பொருத்தே மீன்பாடுகள் வரத்தில் மாற்றம் ஏற்படும், என்றனர்.

The post தருவைகுளத்தில் சூறை மீன் வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Daruwaikulam ,Kulathur ,Darvaikulam ,Thoothukudi district ,Dinakaran ,
× RELATED தருவைக்குளத்தில் கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் துவக்கம்