×

1,080 ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி

தர்மபுரி, ஜூன் 25: தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், காரிமங்கலம், பாலக்கோடு, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர் ஆகிய ஒன்றியங்களில் 1,575 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளன. கோடை விடுமுறைக்கு பின், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டன. தர்மபுரி மாவட்டத்தில் 11 மற்றும் 12ம் வகுப்பில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை சார்பில், 11 மற்றும் 12ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சிகளை நடத்த, அரசு உத்தரவிட்டது.

இதன்படி முதல் கட்டமாக, ஆசிரியர்களுக்கு மாநில அளவில் முதன்மை கருத்தாளர்களுக்கான பயிற்சி, கடந்த 19ம்தேதி நடந்தது. 2ம் கட்டமாக மாவட்ட கருத்தாளர்களுக்கான பயிற்சி, கடந்த 21 மற்றும் 22ம்தேதி நடந்தது. இதில் பயிற்சி பெற்ற மாவட்ட கருத்தாளர்கள் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு நேற்று பயிற்சியளித்தனர். இந்த பயிற்சி தர்மபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம், மொரப்பூர், அரூர், பாப்பிரெட்டிப் பட்டி ஆகிய 8 ஒன்றியத்தில் 41 குறு மற்றும் வட்டார வளமையங்களில் நடந்தது. இதில், 1,080 ஆசிரிகள் பங்கேற்று பயிற்சி பெற்றனர். மாவட்ட கருத்தாளர்கள் 41 பேர் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

தர்மபுரி ஒன்றியத்துக்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 11 மற்றும் 12ம் வகுப்பு கற்பிக்கும் முதுகலை தொடர் பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது. இப்பயிற்சி தர்மபுரி அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி, இலக்கியம்பட்டி ஆகிய மையங்களில் நடைபெற்றது. இதில் தர்மபுரி ஒன்றியத்தில் உள்ள 13 மேல்நிலைப்பள்ளிகளை சார்ந்த 148 முதுகலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மாணவ, மாணவிகளின் உடல்நலம், நலவாழ்வு, மனநலம் மற்றும் வாழ்வியல் திறன்கள் ஆகிய தலைப்புகளில் பயிற்சி நடைபெற்றது.

அவ்வையார் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பயிற்சியை, பள்ளி தலைமை ஆசிரியை கலைச்செல்வி தொடங்கி வைத்தார். மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) ரவிச்சந்திரன் முகாமை நேரில் பார்வையிட்டு, பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். அவ்வையார் பள்ளியில் நடைபெற்ற பயிற்சியில், முதுகலை ஆசிரியர்கள் ஜோதிலதா, ராஜேஸ்வரி, தாமரைச்செல்வி மற்றும் ஞானமூர்த்தி ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டனர்.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘தர்மபுரி மாவட்டத்தில் அரசு பள்ளியில் பணியாற்றும் 11 மற்றும் 12ம் வகுப்பு ஆசிரியர்களுக்கான, தொடர் பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள், மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள். மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகளை வெளிக்கொணரும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் கலை திருவிழாவில் இடம்பெறும் பல்வேறு வகையான போட்டிகளில் பங்கேற்பது பற்றியும், அவர்களுடைய திறமைகளை வெளிக் கொணர்ந்து சாதனை புரியவும், தமிழக அரசின் பல்வேறு சலுகைகள் மற்றும் பயன்கள் பற்றியும் தெளிவாக கூறப்பட்டது,’ என்றனர்.

The post 1,080 ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Nallampally ,Bennagaram ,Karimangalam ,Palakodu ,Aroor ,Paprirettipatti ,Morapur ,Dinakaran ,
× RELATED சிறுமியின் காதலை கண்டித்த தாயின்...