×

கொங்கணாபுரம் சந்தையில் 11 ஆயிரம் ஆடுகள் விற்பனை

இடைப்பாடி, ஜூன் 25: கொங்கணாபுரத்தில் நேற்று கூடிய வாரச்சந்தையில், 11 ஆயிரம் ஆடுகள் விற்பனையானது. சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே கொங்கணாபுரத்தில் வாரச்சந்தை நேற்று கூடியது. பக்ரீத் பண்டிகை வரும் 29ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் சந்தைக்கு சேலம், நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 11ஆயிரம் ஆடுகளை வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். அதிகாலையில் இருந்தே ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. 10கிலோ எடை கொண்ட வெள்ளாடு ₹5,500 முதல் ₹7ஆயிரம் வரையும், கிடாய் ₹7ஆயிரம் முதல் ₹8ஆயிரம் வரையும், 20 கிலோ எடைகொண்ட செம்மறி ஆடு ₹14ஆயிரம் முதல் ₹17ஆயிரம் வரையும், வளர்ப்பு குட்டி ஆடு ₹2,800 முதல் ₹3200 வரையும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த வாரத்தை விட ஆடுகள் விலை ₹500 முதல் ₹1000 வரை அதிகரித்தது.

இதேபோல், 4 ஆயிரம் பந்தய சேவல், கோழிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் காகம், மயில், கீரி உள்ளிட்ட ரகங்களை சேர்ந்த பந்தய சேவல்கள் ₹2500 முதல் ₹6500 வரை விற்கப்பட்டது. இதை தவிர 160 டன் காய்கறிகள், 30டன் பலாப்பழம் விற்பனைக்கு குவிந்தது. பலாப்பழம் தரத்திற்கு ஏற்ப ₹100 முதல் ₹400வரை விற்பனை செய்யப்பட்டது. தக்காளி கிலோ ₹30 முதல் ₹40 வரையும், சின்ன வெங்காயம் ₹60 முதல் ₹70வரையும், பெரிய வெங்காயம் ₹20 முதல் ₹30 வரையும் விற்பனையானது. சந்தையில் நேற்று ₹8கோடிக்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post கொங்கணாபுரம் சந்தையில் 11 ஆயிரம் ஆடுகள் விற்பனை appeared first on Dinakaran.

Tags : Konkanapuram market ,Ethapadi ,Konkanapuram ,Salem district ,Edappadi ,Konganapuram ,Dinakaran ,
× RELATED புயலுக்கு கேட்ட நிவாரணம்...