×

குலசேகரம் அரசு ஆஸ்பத்திரி தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்வு ₹5.75 கோடியில் புதியகட்டமைப்பு அமைச்சர் மனோதங்கராஜ் ஆய்வு

குலசேகரம், ஜூன் 25: குமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகள் மற்றும் ஏராளமான கிராமபுற மக்களுக்கு உயிர்நாடியாக இருப்பது குலசேகரம் அரசு மருத்துவமனை. இந்த மருத்துவமனையை பொதுமக்களின் வசதிக்காக தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திமுக ஆட்சியின்போது இங்கு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள ₹50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆட்சி மாற்றத்தால் ஒதுக்கப்பட்ட பணம் திரும்ப பெறப்பட்டது. அதன் பிறகு போதிய மருத்துவர்கள், ஊழியர்கள் நியமிக்கப்படாததால் பொதுமக்கள் அவசர சிகிச்சைகளுக்கு தனியார் மருத்துவமனை அல்லது பல கிமீ தூரத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளை நாடி செல்ல வேண்டிய நிலை இருந்தது.

இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் இந்த மருத்துவமனையை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அமைச்சர் மனோதங்கராஜ் அதற்கான முயற்சிகளில் தீவிரம் காட்டினர். இதன் பலனாக தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு தற்போது மேம்பாடு பணிகள் மேற்கொள்ள ₹5.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தரைதளம் மற்றும் 2 மேல் தளங்களுடன் புதிய கட்டிடம் கட்டப்படுகிறது. அதோடு அவசர சிகிச்சை பிரிவு, எக்ஸ்ரே, ஸ்கேன் வசதி, அறுவை சிகிச்சை அரங்கு, மருத்துவர்கள், ஊழியர்கள் தங்கும் அறைகள் என அனைத்து அம்சங்களுடன் மருத்துவமனை புது பொலிவு பெறுகிறது. இதற்கான பணிகள் குறித்து அமைச்சர் மனோதங்கராஜ் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில் மாவட்ட கலெக்டர் தர், பத்மநாபபுரம் சப் கலெக்டர் கௌசிக், மருத்தும் மற்றும் ஊரக நலபணிகள் துறை இணை இயக்குநர் பிரகலாதன், அரசு வழக்கறிஞர் ஜாண்சன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் திமுக செயற்குழு உறுப்பினர் ரெமோன் மனோதங்கராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் அலாவுதீன், திருவட்டார் வடக்கு ஒன்றிய திமுக துணை செயலாளர் ஜோஸ் எட்வர்ட், குலசேகரம் பேரூராட்சி தலைவர் ஜெயந்தி ஜேம்ஸ், செயல் அலுவலர் எட்பின் ஜோஸ், கவுன்சிலர் அமல்ராஜ், திற்பரப்பு பேரூராட்சி தலைவர் பொன் ரவி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் மனோதங்கராஜ் கூறுகையில், குலசேகரம் அரசு மருத்துவமனையை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை. மலைவாழ் மக்களுக்கு இது முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவமனை என்பதால் இதனை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது ₹5.75 கோடியில் வளர்ச்சி திட்டங்களுக்கு தமிழ்நாடு முதல்வர் அனுமதியளித்துள்ளார். இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது என்றார்.

பாராளுமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் உறுதி அமைச்சர் மனோதங்கராஜ் நிருபர்களிடம் கூறியது: இந்த முறை பாஜ ஆட்சிக்கு வர முடியாது. ஏனென்றால் அனைத்து துறைகளிலும் தோல்வியை சந்தித்துள்ளனர். கருப்பு பணம் வரவில்லை ஆனால் கருப்பு பணம் இங்கிருந்து வெளி நாடுகளுக்கு கோடி கோடியாக செல்கிறதாக தகவல்கள் வருகிறது. வரும் தேர்தலில் நல்ல தீர்ப்பு வர உள்ளது. அதற்கு அச்சாணியாக தான் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைத்து உள்ளன.இது மிக பெரிய தாக்கத்தை உருவாக்கும். கடந்த தேர்தலில் பாஜக 37.7 சதவிகித வாக்குகளை பெற்றது. எதிர்கட்சிகள் மொத்தமாக 67.3 வாக்குகளை பெற்றது. கடந்த முறை வாக்குகள் சிதறியதால்தான் பாஜக ஆட்சியை பிடித்தது. தற்போது எதிர்கட்சிகள் சமத்துவம், சமுகநீதி என்ற கோட்பாட்டில் ஓரணியில் திரண்டு உள்ளது. இதனால் வரும் பாராளுமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் உறுதி.

வெளிநாட்டு பயணத்தின் போது இந்திய துணை கண்டத்தின் சிறுபான்மை மக்கள் பாதுகாப்பாக வாழ முடிய வில்லை என்று கேள்வி கேட்ட போது , பதில் இல்லாத நிலையில் அவர் நாட்டை நடத்துகிறார் என்பது உலகத்திற்கே வெளிச்சம். வள்ளலார், வாடிய பயிரை கண்டபோது எல்லாம் வாடினேன் என்றார். இது பயிர்களுக்கு மட்டும் இல்லை மனிதர்களுக்கும் பொருந்தும். சனாதனத்துக்கு எதிரானது அது. தற்போது வள்ளலாரை சனாதன வாதிகள் தமதாக்கி கொள்ள முயல்கின்றனர். வள்ளலார், திருவள்ளுவர் ,சித்தர்கள் எழுதிய நூல்களை அவர்கள் தொட்டு கூட பார்க்க அருகதை இல்லை. இவையெல்லாம் சமத்துவத்தை பேசுகிறது, சமூக நீதியை பேசுகிறது. இவை இரண்டுக்கும் எதிரானவர்கள் சனாதனம் பேசுகிறவர்கள். இவ்வாறு அவர் கூறினார்.

திருநந்திக்கரை கோயிலில் 30ம் தேதி சிறப்பு பூஜை
திருநந்திக்கரை, நந்தீஸ்வரர் கோயில் சிறப்பு வாய்ந்த 12 சிவாலயங்களில் ஒன்று. இதில் உள்ள கும்ப கலசம் சேதமடைந்து உள்ளது. இதனை சரி செய்வதற்கு அறநிலையத்துறை சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. வரும் 30 ம் தேதி இதற்காக லெகு பாலாலயம் பூஜை நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து நிபுணர்கள் கும்பத்தில் உள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்து அதனை சரி செய்ய உள்ளனர். தொடர்ந்து பரிகார பூஜைகள் நடைபெறும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

The post குலசேகரம் அரசு ஆஸ்பத்திரி தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்வு ₹5.75 கோடியில் புதியகட்டமைப்பு அமைச்சர் மனோதங்கராஜ் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Kulasekaram Government Hospital ,Taluk Hospital ,Minister ,Manothankaraj ,Kulasekaram ,Kulasekaram Government ,Kumari district ,Manodhankaraj ,Dinakaran ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...