×

அதிகாரி தற்கொலை செய்த சம்பவம் வீட்டை ஆக்ரமித்த கும்பலை விரட்டியடித்த பொதுமக்கள் நள்ளிரவில் முற்றுகையிட்டு அதிரடி

மார்த்தாண்டம், ஜூன் 25: கன்னியாகுமரி மாவட்டம் பத்துகாணி நிரப்புரோடு பகுதியை சேர்ந்தவர் ஹரிஹரன் (50). வெளிநாட்டில் உள்ள நிறுவனத்தில் அக்கவுண்ட் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி நளினி (45). இவர் மதுரையில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். ஹரிஹரன் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார். இந்நிலையில் அவரது வீட்டை அப்பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வி என்பவருக்கு வாடகைக்கு கொடுத்துள்ளார். இதில் அவர்களுக்கு இடையே பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டை காலி செய்யும்படி ஹரிஹரன் பலமுறை தமிழ்ச்செல்வியிடம் கூறியுள்ளார். ஆனால் அவர் வீட்டை காலி செய்யவில்லை. இதனால் ஹரிஹரன் பத்துகாணி காவல் நிலையத்திலும், மாவட்ட கலெக்டரிடமும் புகார் மனு அளித்துள்ளார். ஆனால் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்து போன ஹரிஹரன் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வந்தார்.

இந்நிலையில் அவரது மனைவி நளினிக்கு, தான் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு பிரபல லாட்ஜில் இருப்பதாகவும், அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்ய போவதாகவும் இமெயில் மூலம் மெசேஜ் அனுப்பி தற்கொலை செய்துகொண்டார். போலீசார் ஹரிஹரன் உடலை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வீட்டை வாடகைக்கு கொடுத்துவிட்டு, அவர்கள் வெளியேறாததால் அதிகாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஹரிஹரனின் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து மார்த்தாண்டம் காவல் நிலையம் மற்றும் குழித்துறை அரசு மருத்துவமனையில் குவிந்தனர்.

அங்கு ஹரிஹரன் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து மார்த்தாண்டம் போலீசார், அவரது உடலை பெற்றுச்செல்லும்படி உறவினர்களிடம் அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் தங்களது வீடு மற்றும் ஒரு ஏக்கர் நிலத்தையும் மீட்டு கொடுத்தால் மட்டுமே இங்கிருந்து அவரது உடலை எடுத்து செல்ல முடியும் எனவும் தெரிவித்தனர். மேலும் ஹரிஹரன் இறப்பதற்கு முன்பு, கலெக்டர் மற்றும் அவரது மனைவிக்கு, வீடு வாடகைக்கு எடுத்த அந்த நபர் தனக்கு பணம் தந்ததாக போலி கையெழுத்து போட்டு பத்திரம் தயார் செய்து வைத்திருந்தது குறித்து அனுப்பிய மெயில் பதிவையும் காட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனை வளாகம் மற்றும் காவல் நிலையம் பரபரப்புக்கு உள்ளானது.

இதனையடுத்து நள்ளிரவில் போலீசாரின் உதவியுடன் ஹரிஹரனின் வீட்டை பொதுமக்கள் சுற்றி வளைத்தனர். வீட்டில் இருந்த அந்த கும்பலை வெளியேறும்படி கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து அங்கு இருக்க முடியாது என புரிந்து கொண்ட அந்த கும்பல் வீட்டில் இருந்து வெளியேறியது. தொடர்ந்து ஊர் பொதுமக்கள் சேர்ந்து ஹரிஹரன் குடும்பத்தாரை வீட்டுக்குள் செல்ல அனுமதித்தனர். இந்நிலையில் நேற்று ஹரிஹரன் உடலை உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவருக்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. வீடு ஆக்ரமிக்கப்பட்டதால் மனம் உடைந்து அதிகாரி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மார்த்தாண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post அதிகாரி தற்கொலை செய்த சம்பவம் வீட்டை ஆக்ரமித்த கும்பலை விரட்டியடித்த பொதுமக்கள் நள்ளிரவில் முற்றுகையிட்டு அதிரடி appeared first on Dinakaran.

Tags : Marthandam ,Hariharan ,Bathukani Tamalurudu ,Kanyakumari district ,Dinakaran ,
× RELATED மார்த்தாண்டத்தில் கேரளாவில் இருந்து...