×

மறைமலைநகர் அருகே ₹300 கோடி மதிப்பீட்டில் தாவரவியல் பூங்கா : அமைச்சர் மா. மதிவேந்தன் நேரில் ஆய்வு

செங்கல்பட்டு, ஜூன் 25; தாவரவியல் பூங்காவை வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் அருகே, கடம்பூர் கிராமத்தில் ₹300 கோடி மதிப்பீட்டில் 137.65 ஹெக்டேர் பரப்பளவில் உலகத்தரத்தில் புதிய தாவரவியல் பூங்கா அமையவுள்ள இடத்தினை வனத்துறை அமைச்சர் டாக்டர்.மா.மதிவேந்தன் நேற்று முன்தினம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர், அவர் பேசுகையில், ‘‘கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட முன்னோடி திட்டங்களில் ஒன்றான சென்னை அருகே தாவரவியல் பூங்கா அமைக்கும் திட்டம் மிகவும் குறிப்பிடத் தகுந்ததாகும். இத்திட்டத்தை விரைவில் செயல்படுத்திட முதலமைச்சர் பல்வேறு ஆலோசனைகள் வழங்கியுள்ளார்.

அதன்படி இத்திட்டத்தை விரைந்து நிறைவேற்றிட கடம்பூர் கிராமத்தில் ₹300 கோடி மதிப்பிலான லண்டன் நியூகினியா பூங்கா மாதிரியில் தாவரவியல் பூங்காவை உலகதரத்தில் அமைத்திட அலுவலர்களுடன் ஆய்வு செய்தேன். இத்திட்டம் நிறைவேற்றப்படுவதன் மூலம் இப்பகுதி மக்களுக்கு அதிகளவு வேலைவாய்ப்பும், பொருளாதார மேம்பாடும் ஏற்படுத்தப்படும். மேலும், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மற்றும் மாமல்லபுரம் ஆகிய சுற்றுலா தலங்களுக்கு இடையே பொதுமக்களுக்கான மிகச்சிறந்த இயற்கை சுற்றுச் சூழலுடன் கூடிய தாவரவியல் பூங்கா அமையவுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், திருத்தேரி காப்புகாட்டில் ₹1.02 கோடி மதிப்பீட்டில் நகர்வனம் திட்டத்தில் மரக்கன்றுகள் வளர்த்தல், சிறு மழைநீர் சேகரிப்பு தேக்கங்கள் அமைத்தல் மற்றும் பொதுமக்கள் பார்வையிடுவதற்கான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள மத்திய வன விரிவாக்க மையத்தில் நபார்டு திட்டத்தில் 10,000 மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு, பசுமைப்பரப்பினை அதிகரிக்கும் பணிகளுக்காக நடவு செய்யப்படவுள்ளது.’’ என்று தெரிவித்தார். இந்த ஆய்வுகளின்போது, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (வனத்துறைத் தலைவர்) சுப்ரத் மஹாபத்ர, செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், , சென்னை மண்டல தலைமை வனப் பாதுகாவலர் கீதாஞ்சலி, மாவட்ட வன அலுவலர் ரவி மீனா, மறைமலைநகர் நகர்மன்ற தலைவர் ஜெ.சண்முகம் மற்றும் உயரதிகாரிகள் உடன் இருந்தனர்.

The post மறைமலைநகர் அருகே ₹300 கோடி மதிப்பீட்டில் தாவரவியல் பூங்கா : அமைச்சர் மா. மதிவேந்தன் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Botanical Garden ,Kiramalainagar ,Minister Hon. ,Mathivendan ,Chengalpattu ,Forest Minister ,M. Madivendan ,Chengalpattu district ,Minister ,Hon. ,Dinakaran ,
× RELATED மலர் கண்காட்சியை முன்னிட்டு ஊட்டி...